தரமணி விடுதிகளில் தங்கியுள்ள இளைஞர்களிடம் நூதன முறையில் பண மோசடி செய்த பீகார் வாலிபர்

தரமணி விடுதிகளில் தங்கியுள்ள இளைஞர்களிடம் தேடிச்சென்று நூதன முறையில் பண மோசடி செய்து வந்த பீகார் வாலிபரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
தரமணி விடுதிகளில் தங்கியுள்ள இளைஞர்களிடம் நூதன முறையில் பண மோசடி செய்த பீகார் வாலிபர்
Published on

சென்னை தரமணி திருவேங்கடம் நகரில் இளைஞர்கள் தங்கி உள்ள விடுதி ஒன்றுக்கு 2 தினங்களுக்குமுன் வந்த வாலிபர் ஒருவர், அங்கு மேல் தளத்தில் தங்கி இருந்தவர்களிடம் பேச்சு கொடுத்தார். அதில், நான் கீழ்த்தளத்தில் புதிதாக வந்து தங்கி இருக்கிறேன். என்னுடைய பணம் அனுப்பும் செயலி லாக் ஆகி விட்டது. அப்பாவை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவசரமாக மருத்துவ செலவுக்கு ரூ.5 ஆயிரம் பணம் அனுப்ப வேண்டும். ஏ.டி.எம்.மில் இருந்து பணம் எடுத்து தருகிறேன் என அப்பாவியாக பேசியுள்ளார். வாலிபரின் பேச்சை உண்மை என்று நம்பிய இளைஞர்கள் அவரது வங்கி கணக்கிற்கு ரூ.5 ஆயிரம் அனுப்பினர். பின்னர் கீழ் தளத்தில் தங்கி இருந்தவர்களிடம் சென்று, 'நான் மேல் தளத்தில் தங்கி உள்ளேன். அம்மாவை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் என அதேபோன்று நைசாக பேசி ரூ.5 ஆயிரம் அனுப்ப வைத்துள்ளார்.

பின்னர் வெளியே சென்று, உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறினர். இதற்கு ரூ.40 ஆயிரம் செலுத்த வேண்டும். வங்கி கணக்கில் அனுப்புங்கள். ஏ.டி.எம். வாசலில் நிற்கிறேன். பணத்தை உடனே எடுத்து வருகிறேன்' என கூறி உள்ளார். இதையும் நம்பி விடுதியில் தங்கி இருந்த 4 பேர் சேர்ந்து ரூ.40 ஆயிரம் ரூபாய் அனுப்பி உள்ளனர். இதையடுத்து, நீண்ட நேரமாகியும் வராததால் தேடி விசாரித்த போது வாலிபர் விடுதியில் தங்கவில்லை. நூதன முறையில் ஏமாற்றி பணத்தை மோசடி செய்ததை உணர்ந்து அதிர்ச்சியடைந்தனர்.

இது பற்றி தரமணியில் உள்ள இதர விடுதிகளில் தங்கி உள்ள நண்பர்களுக்கு தகவல் தந்து எச்சரிக்கையாக இருக்க கூறினர். இந்த நூதன மோசடி குறித்து தரமணி போலீசில் புகார் செய்யப்பட்டது.

இந்த நிலையில் தரமணியில் உள்ள மற்றொரு விடுதிக்கு சென்ற அந்த மோசடி வாலிபர், அதேபோல் பேசி அங்குள்ள இளைஞர்களிடம் பணம் பறிக்க முயன்றுள்ளார். ஏற்கனவே விடுதியில் மோசடி செய்த சம்பவத்தை அறிந்த இளைஞர்கள் சுதாரித்த நிலையில், நைசாக பேச்சுக்கொடுத்து தரமணி போலீசாருக்கு தகவல் தந்தனர். தரமணி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்ததை கண்டதும் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பிக்க முயன்றார்.

ஆனால் அவரை தப்பிக்க விடாமல் போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், மோசடியில் ஈடுபட்டவர், பீகார் மாநிலத்தை சேர்ந்த சச்சின் குமார் (வயது 22) என்பதும், பி.ஏ. பட்டதாரியான இவர், பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தததும் தெரியவந்தது. ஆனால் அங்கு வேலை பறிபோனதால் சென்னையில் உள்ள நண்பர்களை பார்க்க வந்த இவர், இங்கு தங்கியிருந்த வேலை பார்க்கும் இளைஞர்களிடம் அம்மா, அப்பா சென்டிமெண்ட் பேசி தொடர் மோசடி செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் சச்சின்குமாரை கைது செய்த போலீசார் அவரிடம் வேறு எங்கேயாவது இது போல் மோசடி செய்து ஏமாற்றி உள்ளாரா என விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com