திருப்பூரில் குடிபோதையில் போலீஸ் வாகனத்தை கடத்திய வாலிபர்; லாரி மீது மோதி நடுரோட்டில் கவிழ்ந்ததால் பரபரப்பு

திருப்பூரில் குடிபோதையில் போலீஸ் வாகனத்தை வாலிபர் ஒருவர் கடத்தி சென்றார். அந்த வாகனம் லாரி மீது மோதி நடுரோட்டில் கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூரில் குடிபோதையில் போலீஸ் வாகனத்தை கடத்திய வாலிபர்; லாரி மீது மோதி நடுரோட்டில் கவிழ்ந்ததால் பரபரப்பு
Published on

போலீஸ் வாகனம் கடத்தல்

திருப்பூர் தெற்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் தினேஷ். இவர் நேற்று மதியம் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீஸ் வாகனத்தில் ரோந்து பணி மேற்கொண்டார்.பின்னர் மதியம் 1.45 மணி அளவில் திருப்பூர் மாநகராட்சி அலுவலக சந்திப்பு பகுதியில் உள்ள தெற்கு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் அமர்ந்து போக்குவரத்து நெருக்கடி குறித்து போலீசாருடன் ஆலோசனை நடத்தி வந்தார். அப்போது இன்ஸ்பெக்டர் ரோந்து செல்ல பயன்படுத்தும் போலீஸ் வாகனத்தை டிரைவரான போலீஸ்காரர் ராஜகுரு, அங்கு நிறுத்திவைத்திருந்தார். பின்னர் சாவியை

வாகனத்தில் வைத்து விட்டு ராஜகுரு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள சுகாதார வளாகத்திற்கு சென்றதாக தெரிகிறது. சிறிது நேரம் கழித்து டிரைவர் திரும்பி வந்து பார்த்தபோது போலீஸ் வாகனத்தை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பார்த்த போது மர்ம ஆசாமி ஒருவர் போலீஸ் வாகனத்தை ஓட்டிச்சென்றது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து திருப்பூர் மாநகரம் முழுவதும் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சோதனை சாவடிகளில் தகவல் தரப்பட்டு வாகன தணிக்கை நடந்தது. போலீசாரும் முக்கிய சாலைகளில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

லாரி மீது மோதல்

இந்த நிலையில் நேற்று மதியம் 2.15 மணி அளவில் திருப்பூர்-ஊத்துக்குளி ரோடு எஸ்.பெரியபாளையத்தில் போலீஸ் வாகனம் ஒன்று, ஊத்துக்குளியில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த லாரியில் மோதி நடுரோட்டில் கவிழ்ந்தது. உடனே அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிச்சென்று பார்த்தபோது போலீஸ் வாகனத்திற்குள் வாலிபர் ஒருவர் தோள்பட்டையில் படுகாயத்துடன் கிடந்தார். இது குறித்து ஊத்துக்குளி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

போதை வாலிபர்

விசாரணையில் அந்த வாலிபர் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சேர்ந்த விஜய் (வயது 23) என்பதும் திருப்பூர் காலேஜ் ரோட்டில் ஹாலோ பிளாக் கல் தயாரிக்கும் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. குடிபோதையில் இருந்ததால் அவர் போலீஸ் வாகனத்தை கடத்தி வந்ததும் தெரியவந்தது. விஜய், எதற்காக போலீஸ் வாகனத்தை கடத்தி சென்றார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பின்னர் விஜய்யை ஏற்றி திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த தகவல் திருப்பூர் தெற்கு போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது. போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாகனத்தை மீட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com