

சென்னை,
2026-27ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில், கிராமப்புற மேம்பாடு, ஊட்டச்சத்து பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை ஊக்குவிக்கும் வேளாண் பொருளாதாரத்தின் ஒரு முக்கிய அங்கமாக கால்நடை பராமரிப்புத் துறை விளங்குகிறது.
நடப்பு நிதியாண்டில், ஊரகப் பகுதிகளில் வாழும் நலிவடைந்த கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 'வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டத்தின்' கீழ் 100 சதவீதம் மானியத்தில் ஐந்து வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்கப்படும். இதன்மூலம், சுமார் 30,000 தகுதி உள்ள நபர்கள் பயனடைவர் என்று நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார்.
அந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில்,வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ், 30,000 தகுதிவாய்ந்த நபர்களுக்கு 100 சதவீதம் மானியத்தில் 5 வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்குவதற்காக 2026-27ம் நிதி ஆண்டிற்கு 109.75 கோடி ரூபாய்க்கான நிர்வாக மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்து தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டம், விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தில் பயன்பெற ஆதார் எண் கட்டாயம் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆதார் எண்ணுக்கு விண்ணப்பித்தும் எண் ஒதுக்கப்படாதவர்கள் மாற்று அடையாள ஆவணங்களைச் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் எண் கிடைக்கும் வரை, பதிவு ரசீதுடன் வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமம் போன்ற அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை காட்டிப் பயன் பெறலாம்.
பயோமெட்ரிக் அங்கீகாரத்தில் சிக்கல் ஏற்பட்டால், ஓடிபி, வேறு பயோமெட்ரிக் முறை அல்லது கியூஆர் கோடு மூலம் சரிபார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆதார் எண் ஒதுக்கப்படாததாலோ அல்லது அடையாளத்தை உடனடியாக நிரூபிக்க முடியாததாலோ தகுதியுள்ள யாருக்கும் திட்டப் பலன்கள் மறுக்கப்படக் கூடாது என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயனாளிகளுக்குப் பயன் கிடைப்பதை உறுதி செய்யத் தனிப் பதிவேடு பராமரிக்கப்பட்டு, துறை ரீதியான மறு ஆய்வும் மேற்கொள்ளப்படும். ஆகையால் தகுதியுடைய நபர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்துப் பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.