ஆதார் எண் இணைப்பு அவசியமா? அலைக்கழிப்பா?; பொதுமக்கள் கருத்து

ஆதார் இணைப்பு கட்டாய முறை மக்களுக்கு அவசியமா? அல்லது அலைக்கழிப்பா? என்பது பற்றிய திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆதார் எண் இணைப்பு அவசியமா? அலைக்கழிப்பா?; பொதுமக்கள் கருத்து
Published on

ஒருவர் பிறப்பு முதல் இறப்பு வரை, படிப்பு முதல் வேலை வரை, எங்கும், எதற்கும், எதிலும் ஆதார்? என்ற நிலை இன்றைக்கு உருவாகிக் கொண்டு வருகிறது.

ஆதார் அறிமுகம்

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ந்தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி நடத்திய தாக்குதல், நாட்டின் பாதுகாப்பு விவகாரத்தில் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும் என்ற படிப்பினையை மத்திய அரசுக்கு உணர்த்தியது.

அப்போதுதான் நாட்டு மக்கள் அனைவருக்கும் கை விரல் ரேகை, கண் கருவிழி ஆகிய உடல்கூறு பதிவுகளுடன் தனி அடையாள எண்ணை வழங்க வேண்டும் என்ற யோசனை அரசாங்கத்துக்கு உதித்தது.

அதற்காக இந்திய தனிநபர் அடையாள ஆணையம் என்ற அமைப்பு கடந்த 2009-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பு மூலம் நாட்டு மக்களுக்கு 12 இலக்க எண்ணுடன் ஆதார் அட்டை வழங்கும் பணி கடந்த 2010-ம் ஆண்டு தொடங்கியது.

140 கோடிக்கு மேலான மக்கள் தொகை கொண்ட நமது நாட்டில் இதுவரையில் 131 கோடி பேருக்கு ஆதார் அடையாள எண் வழங்கப்பட்டுவிட்டது.

எதிர்ப்புக் கிளம்பியது

தனி நபர் அடையாள எண்ணாக ஆதார் அறிமுகம் ஆனாலும் நாளடைவில் மத்திய அரசின் மானியங்கள், சலுகைகளைப் பெறுவதற்கும் அது அவசியம் என்று ஆணைகள் வந்தன.

ஆரம்பத்தில் அதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. முக்கிய விவாத பொருளாகவும் மாறியது. நீதிமன்றங்கள் வரை வழக்குகளும் சென்றன. இறுதியில் ஆதாரே வென்றது.

அதையடுத்து வருமான வரி செலுத்துவதற்கான பான் எண் (நிரந்தர கணக்கு எண்), வங்கி கணக்கு எண், ரேஷன் அட்டை, வருங்கால வைப்பு நிதி எண் போன்ற அனைத்திலும் ஆதார் எண் இணைப்பு கட்டாயம் ஆக்கப்பட்டது.

ஆயுதமானது

வங்கிகள் மூலம் சமையல் கியாஸ் மானியம் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் ஆனவுடன் ஒரு கோடி போலி இணைப்புகள் கண்டறியப்பட்டு நீக்கம் செய்யப்பட்டன. இதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ.3 ஆயிரத்து 445 கோடி மானியத் தொகை மிச்சம் ஆனது.

ரெயிலில் 'டிக்கெட்' முன்பதிவு செய்ய தனி நபருக்கான ஐ.ஆர்.சி.டி.சி. இணையதள கணக்கிலும் ஆதார் இணைப்பு கட்டாயம் ஆனவுடன் போலி கணக்குகள் ஒழிக்கப்பட்டன. இது போன்று மத்திய அரசின் மானியங்கள், திட்டங்களில் முறைகேடுகளை ஒழித்துக்கட்டும் ஆயுதமாக ஆதார் மாறியது.

தமிழ்நாட்டில் கட்டாயம்

தமிழகத்தைப் பொறுத்த அளவில் முதலில் ரேஷன் கார்டுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டது. பின்னர், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் என்று அறிவிக்கப்பட்டது. அதன் மூலம் 1 கோடி ஆதார் எண்கள் இதுவரை இணைக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து இணைக்கும் பணி நடந்து வருகிறது.

இந்த நிலையில் தமிழக அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகள், சலுகைகள், மானியங்கள் பெறுவதற்கும் ஆதார் எண் கட்டாயம் என்ற அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

அதில், திட்ட பயனாளிகளின் ஆதார் அங்கீகாரத்தை பெறுவதற்கான கை விரல் ரேகை பதிவு சரியாக செயல்படாவிட்டால் மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும். முகப்பதிவு போன்ற அடையாள பதிவை மேற்கொள்ளலாம் அல்லது ஆதார் ஓ.டி.பி.முறையிலும் முயற்சி மேற்கொள்ளலாம்' என்ற அறிவிப்பும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு வருகிற ஜனவரி 14-ந்தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்கிறது.

இதுபோன்ற ஆதார் இணைப்பு கட்டாய முறை மக்களுக்கு அவசியமா? அல்லது அலைக்கழிப்பா? என்பது பற்றிய திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் பார்வை வருமாறு:-

வரவேற்கத்தக்கது

முருகன் (வியாபாரி, மேட்டுப்பட்டி):- ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, வங்கி உள்ளிட்ட அனைத்து விவரங்களுடன் ஆதார் எண் விவரங்கள் இணைக்கப்பட்டு வருகிறது. எனவே அரசின் நலத்திட்ட உதவிகள், சலுகைகள் பெற ஆதார் எண் விவரங்களை இணைப்பது வரவேற்கத்தக்கது. அப்போது தான் தகுதியான பயனாளிகளுக்கு அரசின் சலுகைகள் கிடைப்பதை உறுதி செய்ய முடியும். போலி ஆவணங்களை சமர்ப்பித்து அரசின் சலுகைகளை பெறுவதையும் தடுக்க முடியும்.

அமுதா (குடும்ப தலைவி, திண்டுக்கல்):- மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளை பெற ஆதார் விவரங்கள் பெறப்படுவது போல், தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள், மானியங்கள், சலுகைகளை பெற ஆதார் எண் விவரங்கள் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனென்றால் ஆதார் எண் விவரங்கள் இணைக்கப்பட்டுவிட்டால் அரசின் சலுகைகளை பெற ஏழை மக்கள் போல் தங்களை காட்டிக்கொள்பவர்கள் இனி பலன் அடைய முடியாது. ஏழை மக்களுக்கான திட்டங்களும் சரியான முறையில் செயல்படுத்தப்படும்.

பயனாளிகளை எளிதில் தேர்வு செய்யலாம்

செந்தில் (முடி திருத்தும் தொழிலாளி, பழனி):- அரசின் நலத்திட்ட உதவிகள், சலுகைகள் தகுதியான அனைவருக்கும் கிடைப்பதில் பிரச்சினை இருந்து வந்தது. அவர்கள் தகுதியான பயனாளிகள் தான் என்பதை உறுதி செய்யும் ஒரு அம்சமாகவே ஆதார் எண் விவரங்கள் இணைப்பை பார்க்க வேண்டும். ஆதார் எண் விவரங்கள் இணைக்கப்பட்டுவிட்டால் ஒருவரின் பெயர் மட்டுமல்ல, அவர் பெயரில் உள்ள வங்கி கணக்கு விவரங்கள், கடன் பெற்ற விவரங்கள் என அனைத்தும் கிடைத்துவிடும். அதன் மூலம் தகுதியான பயனாளிகளை எளிதில் தேர்வு செய்ய அரசுக்கு ஆதார் அட்டை விவரங்கள் உதவும்.

பவித்ரா (குடும்ப தலைவி, நத்தம்):- ஆதார் அடையாள அட்டை தனிமனித அடையாளமாக விளங்குகிறது. மின் இணைப்பு எண், வாக்காளர் அடையாள அட்டை, வீட்டுமனை பட்டா என நாம் வைத்திருக்கும் முக்கிய ஆவணங்கள் அனைத்துடனும் ஆதார் எண் விவரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. தற்போது அரசின் நலத்திட்ட உதவிகள், சலுகைகள், மானியங்களை பெறுவதற்கும் ஆதார் எண் விவரங்கள் இணைக்கப்பட்டுவிட்டால் எத்தனை பயனாளிகள் அரசின் திட்டங்கள் மூலம் பலன் அடைந்துள்ளனர் என்பதை அரசுக்கு உடனடியாக தெரியப்படுத்த முடியும். மேலும் ஒவ்வொரு முறையும் தகுதியான பயனாளிகள் குறித்து அரசு கணக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியமும் இருக்காது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஒரே குடையின்கீழ்...

அரசின் திட்டங்களுக்கு ஆதார் இணைப்பு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கு சிரமம் இன்றி அதுகிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். ஆதார் அட்டையில் முகவரி மாற்றம், செல்போன் மாற்றம் போன்றவைகளுக்காக மக்கள் அலைகழிக்கப்படும் நிலை தவிர்க்கப்பட வேண்டும்.

அதேப் போன்று வாக்காளர் அடையாள அட்டை எண், நலத்திட்டங்களுக்கு என்று தனித்தனியாக ஆதார் இணைப்பை செயல்படுத்தாமல் அதனை ஒரே குடையின் கீழ் செயல்படுத்த வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பாகவும், கோரிக்கையாகவும் இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com