

சென்னை,
தமிழகத்தில் தவெக தலைமையிலான கூட்டணி அரசு பொறுப்பேற்றுள்ளது. தவெக அரசின் முதல் சட்டசபை கடந்த 18ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.
கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவதாம் சட்டசபையில் இன்று நடைபெற்றது.
அப்போது, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று குற்றஞ்சாட்டினார். மேலும், தவெக ஆட்சியில் தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக உதயநிதி ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினின் குற்றச்சாட்டுகளுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலடி கொடுத்துள்ளார். சட்டசபையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியதாவது,
கடந்த திமுக ஆட்சியில் துணை முதல்-அமைச்சராக தற்போது உள்ள எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இருந்தார். தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையின் அடிப்படையில் திமுக ஆட்சியில் கடந்த 2023ம் ஆண்டு நடந்த குற்றங்களுடன் ஒப்பிடும்போது 2024ம் ஆண்டு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 40 சதவீதம் அதிகரித்துள்ளது. திமுக ஆட்சியில் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது துணை முதல்-அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இருந்தபோது ஒராண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 40 சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் போதைப்பொருள் புழக்கம். 6 ஆண்டுகளுக்குமுன் தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் கிடையாது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் பல மடங்கு அதிகரித்துள்ளது. துணை முதல்-மந்திரியாக இருந்த உதயநிதி ஸ்டாலின் ஏதேனும் ஆலோசனை கூட்டம் நடத்தி பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைத்தாரா?
தவெக ஆட்சியில் கடந்த 40 நாட்களில் பெண்கள் பாதுகாப்பு குறித்து பல்வேறு முன்னெடுப்புகளை தொடங்கியுள்ளோம். காவல்துறையில் சீர்திருத்தங்கள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் நிலவி வரும் போதைப்பொருள் புழக்கத்தை கடந்த திமுக ஆட்சியில் கட்டுப்படுத்த தவறிவிட்டனர். போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுகின்றனர். திமுக நிர்வாகி 2 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவமும் அரங்கேறியுள்ளது. தவெக ஆட்சியின் தவறு செய்பவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் சட்டம் - ஒழுங்கு நேர்மையாக மாற்றப்பட்டுள்ளது. 6 மாதத்திற்குள் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பிற மாநிலங்களுக்கு உதாரணமாக திகழும் வகையில் மாறும். தவெக ஆட்சியில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
இவ்வாறு வர் கூறினார்.