த.வெ.க.வில் ஆதவ் அர்ஜுனாவுக்கு முக்கிய பதவி

பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு ஆதவ் அர்ஜுனா, அதிமுக நிர்வாகி நிர்மல் குமார் ஆகியோர் வருகை தந்தனர்.
சென்னை,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளராக செயல்பட்டு வந்தவர் ஆதவ் அர்ஜுனா. கட்சி விரோத செயலில் ஈடுபட்டதாக கூறி ஆதவ் அர்ஜுனாவை 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கடந்த மாதம் அறிவித்தார். இதையடுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகுவதாக ஆதவ் அர்ஜுனா அறிவித்தார்.
இந்நிலையில், ஆதவ் அர்ஜுனா இன்று பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்திற்கு வந்தார். அதேபோல,அதிமுக தகவல் தொழில்நுட்பப்பிரிவு இணைச்செயலாளராக உள்ள நிர்மல் குமாரும் பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு வந்தார்.தவெக அலுவலகத்திற்கு வந்த இருவரும் தங்களை அக்கட்சியில் இணைத்துக்கொண்டனர்.
தவெகவில் இணைந்துள்ள ஆதவ் அர்ஜுனாவிற்கு தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தவெகவின் அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியுடன் இணைந்து ஆதவ் அர்ஜுனா செயல்படுவார் எனவும் தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார். அதேபோல,தகவல் தொழில் நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு துணை பொதுச்செயாளராக நிர்மல் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.