திருத்தணி முருகன் கோவிலில் ஆடிப்பூர விழா கோலாகலம்

திருத்தணி முருகன் கோவிலில், ஆடிப்பூர விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள், அலகு குத்தியும், காவடி எடுத்தும் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.
திருத்தணி முருகன் கோவிலில் ஆடிப்பூர விழா கோலாகலம்
Published on

திருத்தணி,

ஆடிப்பூர விழா

திருத்தணி முருகன் கோவிலில் ஆடிப்பூர விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதை முன்னிட்டு அதிகாலை மூலவர் முருகப்பெருமானுக்கு பால், பழம், தேன், இளநீர் ஆகிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைப்பெற்றது.

ஆடிப்பூர விழாவை ஒட்டி சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்காக பக்தர்கள் நேற்று முன்தினம் முதலே, திருத்தணிக்கு தேவஸ்தான குடில்கள், தனியார் விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்களில் தங்கி இருந்தனர். மேலும், நேற்றும் பக்தர்கள் வருகை அதிகரித்ததால் கூட்டம் அலைமோதியது.

அலகு குத்தி வழிபாடு

பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்ற உடல் முழுவதும் அலகு குத்தி, மொட்டை அடித்து, மலர் மற்றும் மயில்காவடிகள் எடுத்து, கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் சரவணபொய்கையில் புனித நீராடினர்.

அதை தொடர்ந்து, மலைப்படிகள் வழியாக சென்று மூலவரை தரிசித்தனர். சில பக்தர்கள் பால்குடம் எடுத்து சென்றும் வழிபட்டனர். காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை தாயாருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் எடுத்து வந்த பால் குடங்களில் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

ஆடிப்பூர விழாவில் கலந்துக்கொள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்ததால், பொதுவழியில் மூலவரை தரிசிக்க 3 மணி நேரமும், சிறப்பு வழியில் நீண்ட வரிசையில் ஒரு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

திருத்தணி போலீஸ் துணை சூப்பிரண்டு விக்னேஷ் உத்தரவின் பேரில், திருத்தணி இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com