"ஆவின்.." - அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

பால் விவகாரத்தில் எந்த சலசலப்புக்கும் அஞ்சவேண்டாம் என்றும் அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்துள்ளார்.
"ஆவின்.." - அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Published on

சென்னை,

சலசலப்புகளுக்கு பால் உற்பத்தியாளர்களும் பொதுமக்களும் அஞ்ச வேண்டாம் என்று தமிழக பால் வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பால் உற்பத்தியாளர்களுக்கு நிலையான, நியாயமான விலை வழங்குவதையும், மக்களுக்கு குறைந்த விலையில் தரமான பால் மற்றும் பால் பொருட்களை வழங்குவதையும் இலக்காக கொண்டு ஆவின் நிறுவனம் செயல்படுவதாக குறிப்பிட்டுள்ளார். விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் பரிசீலித்து உரிய நேரத்தில் அவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் விதமாக உரிய நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கபட்டுவிட்டன என்றும் அவர் கூறியுள்ளார்.

பொதுவாக ஒரு மாநிலத்தின் பால் உற்பத்தி பகுதியில் இன்னொரு மாநிலத்தின் பால் உற்பத்தி நிறுவனம் தலையிடுவதில்லை என்று கூறியுள்ள அமைச்சர், அதனால்தான், தமிழகத்தில் வேறு மாநிலங்களை சேர்ந்த பால் உற்பத்தி நிறுவனங்களை அனுமதிக்க வேண்டாம் என்று மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதினார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எந்த விதத்திலும் பால் உற்பத்தியாளர்கள் நலன், ஆவின் வாடிக்கையாளர்களான பொதுமக்களின் நலன் என இரண்டிலும் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை இந்த அரசு ஏற்றுக்கொண்டுள்ளதால், எந்த சலசலப்புக்கும் அஞ்சவேண்டாம் என்றும் அமைச்சர் மனோதங்கராஜ் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com