

சென்னை,
சென்னையில் ஆவின் பால் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனம் மூலமே பொதுமக்களுக்கு தேவையான பால் தேவை தீர்த்து வைக்கப்படுகிறது. குறிப்பாக, சென்னை மக்கள் பெரும்பாலும் ஆவின் பாலையே நம்பி உள்ளனர். ஆரஞ்சு, பச்சை, நீலம் ஆகிய பால் பாக்கெட்டுகளே பொதுமக்களுக்கு வினியோகம் செய் யப்படுகிறது. இதில், பச்சை நிற பால் பாக்கெட்டுகளையே பொதுமக்கள் அதிகம் விரும்பி வாங்குகிறார்கள். அந்த வகையில், சென்னையில் நாள் தோறும் ஆவின் பால் விற்பனை 16.5 லட்சம் லிட்டராக இருந்து வந்தது.
கடந்த 6 மாதங்களாக ஆவின் பால் விற்பனை கணிசமாக குறைந்து வருகிறது. அதாவது 10 முதல் 15 சதவீதம் வரை பால் விற்பனை குறைந்துள்ளதாக பால் முகவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, பொது மக்கள் அதிகம் வாங்கும் பச்சை நிற பால் பாக்கெட்டுகளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் முதலே ஆவின் பால் பாக்கெட்டுகளுக்கு திடீர் தட்டுப்பாடு நிலவுவதாக பொதுமக்களும், வாடிக்கையாளர்களும் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஆவின் பால் கொள்முதலை அதிகரிக்காததாலேயே இத்தகைய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக முகவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதனால், சென்னை மட்டும் அல்லாது கோவை, திருச்சி, மதுரை, சேலம், ஈரோடு போன்ற மாவட்டங்களிலும் பால் தட்டுப்பாடு நிலவி வருவதாக கூறப்படுகிறது. இந்த தட்டுப்பாட்டால், ஆவின் விற்பனை நிலையத்திற்கு முன்பு வழங்கப்பட்டு வந்த ஆவின் பால் பெட்டிகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையின் பல்வேறு இடங்களில் காலை நேரத்தில் உடனடியாக ஆவின் பால் பாக்கெட்டுகள் தீர்ந்து விடுகிறது.
தேவையான அளவுக்கு ஆவின் பால் வாங்க முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். மேலும், சிறிய ரக மளிகை கடைகளில் பச்சை நிற பால் பாக்கெட்டுகள் ரூ.2 வரையில் கூடுதலாக அதாவது ½ லிட்டர் ரூ.24 என விலை வைத்து விற்பனை செய்யப்படுகிறது. பால் தட்டுப்பாடு காரணமாக ஆவின் பாலை நம்பியுள்ள குடும்பங்கள் அதிக விலை கொடுத்து தனியார் பால் பாக்கெட்டுகளை வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.