வடசென்னையில் ஆவின் பால் விநியோகம் கடும் பாதிப்பு: காரணம் என்ன?

பெரம்பூர், கொளத்தூர் உள்ளிட்ட வடசென்னையின் பல பகுதிகளில் ஆவின் பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

மாதவரம் பால் பண்ணையில் ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்சினை காரணமாக, வடசென்னையில் ஆவின் பால் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனரும், மாநில தலைவருமான சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

மாதவரம் பால் பண்ணையில் ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்சினை காரணமாக பால் பாக்கெட் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு இன்று பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க. நகர், வியாசர்பாடி, கொடுங்கையூர், கொருக்குப்பேட்டை உள்ளிட்ட வடசென்னையின் பல பகுதிகளில் ஆவின் பால் விநியோகம் முடங்கியது.

மாதவரம் பால் பண்ணையில் தொழிலாளர்களுக்கான ஒப்பந்தம் கடந்த மார்ச் 31-ந்தேதியுடன் நிறைவடைந்து சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் தொழிலாளர்களுக்கான ஒப்பந்தம் எடுத்துள்ள ஒப்பந்ததாரருக்கு மாதவரம் பால் பண்ணைக்கான ஒப்பந்தம் சேர்த்து வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஒப்பந்தம் பெற்ற ஒப்பந்ததாரரால் மாதவரம் பால் பண்ணை பணிக்கு தேவையான சுமார் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை அனுப்ப இயலாததால், வெறும் 8 பேரை மட்டுமே அனுப்ப முடிந்துள்ளது. இதனால் கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக ஒப்பந்த தொழிலாளர்கள் பணிக்கு வராததால், வெறும் 8 தொழிலாளர்களை கொண்டு மாதவரம் பால் பண்ணை இயங்கி வந்துள்ளதால், பால் முகவர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஆவின் பாலினை தங்குதடையின்றி விநியோகம் செய்திட வேண்டும் என மொத்த விநியோகஸ்தர்களின் வாகன ஓட்டுநர்களும், வாகன உதவியாளர்களும் பால் பாக்கெட்டுகளை பால் டப்புகளில் அடுக்கி வாகனங்களில் ஏற்றும் பணிகளை தொடர்ந்து செய்து வந்துள்ளனர்.

ஆனால், தொழிலாளர்கள் பற்றாகுறையை சரி செய்ய ஆவின் நிர்வாகம் தரப்பிலிருந்தும், ஒப்பந்ததாரர் தரப்பிலிருந்தும் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் ஒப்பந்த தொழிலாளர்கள் செய்யும் பணிகளை தங்களால் செய்ய முடியாது என மொத்த விநியோகஸ்தர்களின் வாகன ஓட்டுநர்கள் தெரிவித்து விட வேறு வழியின்றி அம்பத்தூர், சோழிங்கநல்லூர் பால் பண்ணைகளில் இருந்து பால் பாக்கெட்டுகளை ஏற்றிச் செல்ல மொத்த விநியோகஸ்தர்களின் வாகனங்கள் திருப்பி விடப்பட இன்றைய தினம் மாதவரம் பால் பண்ணையில் இருந்து விநியோகம் செய்யப்பட வேண்டிய ஆவின் பால் விநியோகம் சுமார் 60 சதவீதத்திற்கும் மேல் முடங்கியது.

இதனால் பொதுமக்களுக்கு ஆவின் பால் விநியோகம் செய்ய முடியாமல் பால் முகவர்களும், ஆவின் பால் கிடைக்காமல் வடசென்னை பகுதி வாழ் பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மாதவரம் பால் பண்ணையில் நிலவும் ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்சினைக்கு போர்க்கால அடிப்படையில் உடனடியாக தீர்வு காணப்படாவிட்டால் நாளை வடசென்னை பகுதி முழுவதும் ஆவின் பால் விநியோகம் முற்றிலுமாக முடங்கும் ஆபத்து உள்ளது. எனவே இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு ஆவின் பால் விநியோகத்தை சீரடையச் செய்யுமாறு பால்வளத்துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆகியோரை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com