மேட்டூர் அணையை திறந்து வைத்து ஜெயலலிதா குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உருக்கமான பேச்சு

காவிரி விவகாரத்தில் சட்டப்போராட்டம் நடத்தி தமிழக மக்களுக்காக இறுதி மூச்சுவரை உழைத்தவர் ஜெயலலிதா என மேட்டூர் அணையை திறந்து வைத்த பின் முதல்-அமைச்சர் பேசினார். #EdappadiPalanisamy #Jayalalitha #Metturdam
மேட்டூர் அணையை திறந்து வைத்து ஜெயலலிதா குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உருக்கமான பேச்சு
Published on

சேலம்,

கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. இதனால் இந்த அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு 1 லட்சத்து 17 ஆயிரத்து 642 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1 லட்சம் கன அடிக்கும் அதிகமாக இருந்தது. தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் பாய்ந்து கொண்டிருக்கிறது. வளைந்து நெளிந்து வரும் காவிரி ஆற்றை பார்க்க கண்கொள்ளா காட்சியாக உள்ளது.

ஐந்தருவி, மெயின்அருவி, பெரியபாணி அருவி உள்ளிட்ட பகுதிகளில் அருவிகளை மூழ்கடித்தபடி புதுவெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல் காவிரி கரையோர பகுதிகளை சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

இதையடுத்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. பிற்பகலில் நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 12 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. காவிரி ஆற்றில் நீர்வரத்தை கண்காணிக்கும் பணியை பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.

மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1 லட்சம் கனஅடிக்கும் அதிகமாக நீர்வரத்து உள்ளதால் அணை நீர்மட்டம் கடந்த சில நாட்களாக கிடு,கிடுவென உயர்ந்து வருகிறது. குறிப்பாக நேற்று முன்தினம் அணைக்கு நீர்வரத்து அதிகபட்சமாக 1 லட்சத்து 7 ஆயிரத்து 64 கனஅடியாக இருந்தது. இதனால் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டிய நிலையில் இன்று காலையில் நீர்மட்டம் 109 அடியாக உள்ளது.

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு தொடர்வதால் ஒகேனக்கல் அருவிகள் மற்றும் ஆற்றில் குளிக்க நேற்று 10-வது நாளாக தடை நீடித்தது. பரிசல்கள் இயக்க விதிக்கப்பட்ட தடையும் நீடிக்கிறது. ஒகேனக்கல்லில் நுழைய சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் வனத்துறை சோதனை சாவடிகளில் போலீசார் மற்றும் வனத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

வெளியூர்களில் இருந்து வாகனங்களில் வந்த சுற்றுலா பயணிகள் திருப்பி அனுப்பப்பட்டனர். ஒகேனக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் காவிரி கரையோரங்களில் போலீசார், தீயணைப்பு மீட்பு படையினர், ஊர்க்காவல் படையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. காலை 10 மணியளவில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணைக்கு வந்து மதகுக்கான பொத்தானை அழுத்தி பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைத்தார். 85 ஆண்டுகால வரலாற்றில் மேட்டூர் அணை பாசனத்துக்காக வழக்கமாக திறக்கும் ஜூன்12-ந்தேதிக்கு பிறகு 59-வது முறையாக திறக்கப் படுகிறது. மேலும் தமிழக முதல்-அமைச்சர் ஒருவர் இந்த அணையில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைப்பதும் இது முதல் முறையாகும்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சரோஜா, தங்கமணி,அன்பழகன், கருப்பண்ணன், சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி, தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேட்டூர் அணையை திறந்துவைத்த பின்னர் முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது:-

காவிரி விவகாரத்தில் சட்டப்போராட்டம் நடத்தி தமிழக மக்களுக்காக இறுதி மூச்சுவரை உழைத்தவர் ஜெயலலிதா. காவிரி பிரச்சனையில் சட்டப்போராட்டம் நடத்தி அதிமுக அரசு வென்று காட்டியுள்ளது. வருண பகவான் அருளாள் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஒரு லட்சம் கன அடியாக உயர்ந்துள்ளது. தனது உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் சட்டப் போராட்டம் நடத்தி தமிழகத்தின் காவிரி உரிமையை மீட்டெடுத்தவர் ஜெயலலிதா.

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது கூட ஜெயலலிதா காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசித்தார் என்றார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து மிகவும் உருக்கமாக பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது அவரது குரல் தழுதழுத்தது. கண்கள் கலங்கி கண்ணீர் விட்டார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

மேட்டூர் அணைப்பகுதியில் நினைவு ஸ்தூபியை கட்டவும், பூங்காவை மேம்படுத்தவும் ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் கடைமடை வரை நீர் செல்லும் அளவுக்கு மேட்டூரிலிருந்து நீர் திறக்கப்படும் .

மேட்டூர் அணையில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com