

ஆலந்தூர்,
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான நடிகர் கமல்ஹாசன், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவை பயணம், புதிய கல்வியை கற்றதாக இருந்தது. மக்கள் பற்றி அறிந்து கொள்ளவும், அவர்களின் அன்பை புரிந்துகொள்ளவும் ஒரு வாய்ப்பாக அமைந்தது. திரையுலகில் சம்பாதிக்காத அன்பை சமூகசேவையில் சம்பாதித்து இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இதனால் ஒருவிதமான பணிவு என்னை சூழந்துகொண்டு உள்ளது.
கருணாஸ் என்ன சொன்னார்? என்று எனக்கு தெரியாது. சாதிகளை மறக்கும் இந்தநேரத்தில் அதை விளையாட்டுக்குக்கூட பேசக்கூடாது. கருணாஸ் மன்னிப்பு கேட்டிருந்தால் அதுவும் நியாயமானது. சாதிகள் பற்றி பேசிய காலம் எல்லாம் முடிந்து விட்டது.
கிராம நிர்வாக சபைதான் உள்ளாட்சி அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டால் அதற்கான ஆயத்தங்களை செய்யாமல் தேர்தலில் போட்டியிடுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. முழு ஆயத்தத்துடன் தான் இறங்க வேண்டும்.
உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வரட்டும். அதன்பிறகு போட்டியிடுவது பற்றி பேசலாம். இவர்கள் நடத்தும் தேர்தலை வேடிக்கையாகத்தான் பார்க்க முடியும்.
கோவையில் பயணத்தின்போது மக்களை சந்திக்க பொதுக்கூட்டத்திற்கு உரிய அனுமதி வழங்கப்படாமல் இடங்கள் மாற்றப்பட்டன. பல தடைகள் இருந்தாலும் மக்கள் பங்கேற்றது மகிழ்ச்சியாக இருந்தது.
புரட்சி செய்த இரும்பு பெண்மணி என்ற பெயரில் ஜெயலலிதா பற்றி அ.தி.மு.க.வினரால் எடுக்கப்படும் படம் பற்றி கருத்துக்கூற விரும்பவில்லை.
ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் 13 பேர் உயிரிழந்து உள்ளனர். இதுபற்றிதான் கேள்வி கேட்கவேண்டும். இதில் தொண்டு நிறுவனங்களுக்கு நிதி தந்தார்களா? என்று பேசுவது சரியல்ல. துப்பாக்கி சூடு வேதனையான விஷயம். செய்த குற்றத்திற்காக மன்னிப்பு கோரவேண்டிய நேரத்தில் குற்றத்தை மக்கள் மீது திருப்புவது தாங்கி கொள்ளமுடியாது.
ஊழலை ஒழிக்க ஆதாரத்துடன் கையும் களவுமாக பிடிப்பதுதான் ஒரே வழி. களவாடியவர்கள் சாதுர்யமாக இருப்பதால் ஆவணங்கள் கிடைப்பது சிரமமாக இருக்கிறது. மற்றபடி முயன்று கொண்டு இருப்பவர்கள் முயன்றுகொண்டே இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.