

சென்னை,
சட்டவிரோதமாக செல்போன் செயலி மூலம் கடன் வழங்கி, கந்துவட்டி மோசடியில் ஈடுபட்ட கும்பலை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த மாதம் பெங்களூருவில் வைத்து கைது செய்தனர். இந்த வழக்கில் மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி சீனாவை சேர்ந்து ஹங்க் என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இந்த கும்பலுக்கு முறைகேடாக 1,100 சிம்கார்டுகள் வழங்கிய சென்னையை சேர்ந்த செல்போன் நிறுவன ஊழியர்கள் உள்பட 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் பெங்களூருவில் கைதான 2 சீனர்கள் உள்பட 4 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது கந்துவட்டி செயலி மூலம் கடன் பெற்றவர்களின் அனைத்து ரகசிய தகவல்களும் 46 சாப்ட்வேர்களை பயன்படுத்தி திருடி இருப்பது தெரியவந்தது.
தற்போது இந்த தகவல் பதிவுகள் அனைத்தும் சீனாவில் பதுங்கி உள்ள ஹங்க் வசம் இருப்பதும் தெரியவந்தது. சீனர்கள் கந்துவட்டி மோசடி செயலில் மட்டும் ஈடுபட்டார்களா? இந்த மோசடி போர்வையில் இந்தியாவை உளவு பார்த்தார்களா? என்ற கேள்வியும் எழுந்தது. இதைத்தொடர்ந்து போலீஸ் காவலில் இருந்த 2 சீனர்களிடம் மத்திய உளவுத்துறையான ரா' பிரிவை சேர்ந்த அதிகாரிகளும் அதிரடி விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த கும்பலை கைது செய்வதற்கு 4 நாட்களுக்கு முன்பு தான், வழக்கின் முக்கிய குற்றவாளியான ஹங்க், பெங்களுரு விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் வழியாக சீனா சென்றிருப்பதும் தெரியவந்தது.
ஹங்க் மீண்டும் இந்தியா திரும்பினால் அவரை விமானநிலையத்தில் வைத்து கைது செய்யும் நடவடிக்கையாக நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அவரை கைது செய்ய இன்டர்போல்' என்றழைக்கப்படும் சர்வதேச போலீசார் உதவியை நாட போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.