

ஆலந்தூர்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமனம் செய்ய லஞ்சம் பெறப்படுவதாக கவர்னரே வெளிப்படையாக சொல்லி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதுவரை 9 துணை வேந்தர்களை நியமித்து இருப்பதாகவும், அவர்கள் முழுமையாக தகுதி அடிப்படையில் லஞ்சம் இல்லாத வகையில் நியமித்து உள்ளதாகவும் அவர் கூறி இருப்பது வரவேற்கத்தக்கது. இது பாராட்டுக்குரியது.
ஆனால் பதவி நியமனங்களில் லஞ்சம் புகுந்து இருப்பது பற்றி கூறி இருப்பதால் முதல்-அமைச்சரை அழைத்து விசாரிப்பதற்கு ஆணையிட வேண்டும். இந்த முறைகேடு பற்றி முழுமையாக விசாரிக்க ஆணையம் அமைக்கவேண்டும்.
ராஜீவ் கொலையாளிகள் 7 பேரை விடுதலை செய்யக்கோரி தமிழக அரசு பரிந்துரை செய்து பல வாரங்கள் ஆகிவிட்டன. ஆனால் அவர்களை விடுதலை செய்வது தொடர்பாக கவர்னர் எந்த முடிவும் எடுக்கவில்லை. மத்திய அரசை கலந்து பேசாமல் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி 7 பேரையும் கவர்னர் விடுவிக்க முடியும். இதில் காலம் தாழ்த்துவது ஏன்? என்று தெரியவில்லை.
கவர்னர் விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 1 லட்சம் அஞ்சல் அட்டைகளை கவர்னர் மாளிகைக்கு அனுப்ப திட்டமிட்டு உள்ளோம். கவர்னர் ஆலோசித்து 7 பேரையும் விடுதலை செய்வார் என்று நம்புகிறோம்.
திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைத்திருப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் மழையை காரணம் காட்டி இடைத்தேர்தலை தள்ளிவைக்க தமிழக செயலாளர் கடிதம் எழுதி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஏதோ அரசியல் உள்நோக்கத்துடன் திட்டமிட்டு செயல்படுவதாக தெரிகிறது.
பாரதீய ஜனதா கட்சியுடன் தேர்தல் உடன்படிக்கையை உறுதி செய்த பிறகு 2 தொகுதிகளிலும் தேர்தலை நடத்தலாம் என்ற திட்டத்துடன் தமிழக அரசு செயல்படுவதாக தெரிகிறது. இதற்கான கால அவகாசத்தை எடுத்து கொள்வதாக பேசப்படுகிறது. அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக தேர்தல் ஆணையம் செயல்படுவது முறையல்ல. 5 மாநில தேர்தலுடன் தமிழக இடைத்தேர்தலை நடத்த வேண்டும்.
உள்ளாட்சி தேர்தலையும் தமிழக அரசு வேண்டும் என்றே காலம் தாழ்த்துகிறது. இரட்டை இலை சின்னம் கிடைத்த பிறகும் காலதாமதம் செய்வது ஏன்? என்று தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.