வன்கொடுமை தடுப்பு சட்டம் : தவறாக பயன்படுத்தப்படுவதை அ.தி.மு.க., தி.மு.க. ஆதரிக்கின்றதா? டாக்டர் ராமதாஸ் கேள்வி

வன்கொடுமை தடுப்பு சட்டம் அப்பாவி மக்கள் மீது தவறாக பயன்படுத்தப்படுவதை அ.தி.மு.க., தி.மு.க. ஆதரிக்கின்றதா? என்று டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
வன்கொடுமை தடுப்பு சட்டம் : தவறாக பயன்படுத்தப்படுவதை அ.தி.மு.க., தி.மு.க. ஆதரிக்கின்றதா? டாக்டர் ராமதாஸ் கேள்வி
Published on

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி அப்பாவிகள் பழிவாங்கப்படுவதை தடுக்கும் வகையில் அந்தச் சட்டத்தில் சில மாற்றங்களைச் செய்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்திருக்கிறது. இது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய நடவடிக்கை ஆகும்.

ஆனால், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதுமட்டுமின்றி அப்பாவிகள் பழிவாங்கப்படுவதை தடுக்கும் வகையிலான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மத்திய அரசு ஏற்கக்கூடாது என்றும் அக்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பா.ம.க. எந்த கட்டத்திலும் எதிர்க்கவில்லை. அதேபோல், பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு அந்த சட்டம் தான் பாதுகாப்பு என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் பாதுகாப்புக்காக கொண்டு வரப்பட்ட அந்தச் சட்டம், அவர்கள் அல்லாத 81 சதவீத மக்களை மிரட்டும் ஆயுதமாக பயன்படுத்தப்படக்கூடாது.

வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்ட நாளில் இருந்து, இன்று வரையிலான 30 ஆண்டுகளில் அச்சட்டத்தால் தமிழகத்தில் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு தெருவிலும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தால் பாதிக்கப்படாதவர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு இச்சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு மத்திய, மாநில அரசுகளின் புள்ளிவிவரங்களே ஆதாரம்.

பட்டியலின, பழங்குடியின மக்களின் பாதுகாப்புக்காக அரசியல் கட்சிகள் குரல் கொடுப்பது எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டம் அப்பாவி மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்படுவதை தடுப்பதும், அது தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை செயல்படுத்த வலியுறுத்துவதும் முக்கியமாகும். அதற்கு மாறாக, ஒரு தரப்புக்கு மட்டும் ஆதரவாக செயல்படும் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் அப்பாவி மக்களை பழிவாங்குவதற்காக வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை ஆதரிக்கின்றனவா அல்லது எதிர்க்கின்றனவா? என்பதை அக்கட்சியின் தலைமைகள் விளக்க வேண்டும்.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் தவறான பயன்பாட்டுக்கு எதிரான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை செயல்படுத்தும்படி அனைத்துக் கட்சிகளும் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். மாறாக, ஒரு சார்பாக செயல்படும் கட்சிகளுக்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் தங்களின் தீர்ப்பை விரைவில் வழங்குவார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com