‘சென்னை ஒன்று செயலி’யில் ஏ.சி. மின்சார ரெயில் டிக்கெட் எடுக்க முடியாது - தெற்கு ரெயில்வே தகவல்

சென்னை ஒன்று என்ற புதிய செயலியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 22-ந்தேதி அறிமுகம் செய்து வைத்தார்.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் பஸ், மெட்ரோ ரெயில், புறநகர் மின்சார ரெயில் மற்றும் வாடகை ஆட்டோ, கார் ஆகிய அனைத்து போக்குவரத்தையும் ஒன்றிணைக்கும் வகையில் ஒரே கியூ-ஆர் பயணச்சீட்டு மூலம் பயணம் செய்ய சென்னை ஒன்று என்ற புதிய செயலியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 22-ந்தேதி அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த செயலியில், புறநகர் மின்சார ரெயிலில் டிக்கெட் எடுத்து பயணிக்கலாம். ஏற்கனவே உள்ள யூ.டி.எஸ்., செயலி இருப்பது போல், இந்த செயலியையும் பயணியர் பயன்படுத்தலாம். புறநகர் ரெயில் கட்டணத்தில் மாற்றம் இல்லை. ‘ஏ.சி.' மின்சார ரெயில் டிக்கெட் எடுக்க முடியாது. டிக்கெட் பரிசோதனையின்போது, பயணியர் ‘அசல் ரெயில் டிக்கெட்டைக் காட்டு' பக்கத்தின் வாயிலாக, டிக்கெட்டுகளைக் காண்பிக்க வேண்டும். டிக்கெட்டுகளை ரத்து செய்ய முடியாது. இந்த டிக்கெட்டுகள் எடுத்த அடுத்த 3 மணி நேரத்துக்குள் பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






