

நெல்லை,
நெல்லையில் ஆசை வார்த்தை கூறி இளம் பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றிய ஏ.சி. மெக்கானிக்கை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை தச்சநல்லூர் நல்மேய்ப்பர் நகரைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவருடைய மகன் சஞ்சய் ராம் என்ற சஞ்சய் (வயது 24). இவர் ஏ.சி. மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், தூத்துக்குடியைச் சேர்ந்த உறவுக்கார இளம்பெண் ஒருவருக்கும் செல்போன் மூலம் பழக்கம் ஏற்பட்டது. தற்போது அந்த இளம்பெண் வெளியூரில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த இளம்பெண்ணை தனது வீட்டுக்கு வரவழைத்து ஆசை வார்த்தை கூறி அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. அதில் அந்த இளம்பெண் கர்ப்பமானார். உடனே அவர் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு சஞ்சய்யிடம் கூறியபோது, அவர் திருமணம் செய்ய மறுத்து அந்த பெண்ணிற்கு மிரட்டல் விடுத்தாராம்.
இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் நெல்லை டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், சஞ்சய் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.