'இன்ஸ்டாகிராமில்' 10 ரூபாய்க்கு விடப்பட்ட சவாலை ஏற்றுஸ்கூட்டரில் வந்து நடுரோட்டில் குளித்த வாலிபருக்கு ரூ.3,500 அபராதம் ஈரோடு போலீசார் அதிரடி நடவடிக்கை

‘இன்ஸ்டாகிராமில்’ 10 ரூபாய்க்கு விடப்பட்ட சவாலை ஏற்று ஸ்கூட்டரில் வந்து நடுரோட்டில் குளித்த வாலிபருக்கு ரூ.3,500 அபராதம் விதிக்கப்பட்டது.
'இன்ஸ்டாகிராமில்' 10 ரூபாய்க்கு விடப்பட்ட சவாலை ஏற்றுஸ்கூட்டரில் வந்து நடுரோட்டில் குளித்த வாலிபருக்கு ரூ.3,500 அபராதம் ஈரோடு போலீசார் அதிரடி நடவடிக்கை
Published on

'இன்ஸ்டாகிராமில்' 10 ரூபாய்க்கு விடப்பட்ட சவாலை ஏற்று ஸ்கூட்டரில் வந்து நடுரோட்டில் குளித்த வாலிபருக்கு ரூ.3 ஆயிரத்து 500 அபராதம் விதித்து ஈரோடு போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

நடுரோட்டில் குளித்த வாலிபர்

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் நேற்று முன்தினம் பகலில் வாகன ஓட்டிகள் பச்சை நிற சிக்னலுக்காக காத்திருந்தனர். அப்போது மீனாட்சி சுந்தரம் சாலையில் இருந்து வாலிபர் ஒருவர் ஸ்கூட்டரில் வந்தார். அவர் பன்னீர்செல்வம் பூங்கா சிக்னல் பகுதியில் ஸ்கூட்டரில் உள்ள ஒரு பக்கெட்டில் வைத்திருந்த தண்ணீரை எடுத்து உடலில் ஊற்றி குளிக்க தொடங்கினார். இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த நபருடன் வந்த நண்பர்களும், வாலிபர் மீது தண்ணீரை ஊற்றினர். மேலும், இந்த சம்பவத்தை செல்போனில் வீடியோ எடுத்தனர்.

அப்போது அங்கிருந்த பொதுமக்கள் மீதும் தண்ணீர் சிந்தியது. இதனால் அவர்கள் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து அந்த வாலிபர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் விசாரணை நடத்தினா. விசாரணையில் அந்த வாலிபர் வெள்ளோட்டை சேர்ந்த பார்த்திபன் (வயது 26) என்பதும், அவர் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் விடுக்கப்பட்ட ஒரு சவாலை ஏற்று நடுரோட்டில் குளித்ததும் தெரியவந்தது.

3 பிரிவுகளில் வழக்கு

இந்தநிலையில் நடுரோட்டில் குளித்த பார்த்திபனை போலீசார் நேற்று ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து எச்சரிக்கை விடுத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் சமூக வலைதளத்தில் விடுக்கப்பட்ட சவாலை ஏற்று அவர் ஏற்கனவே இரவு நேரத்தில் நடுரோட்டில் படுத்து தூங்கியது, சமைக்காமல் மீன்களை சாப்பிடுவது, இரவில் கிணற்றில் குளிப்பது போன்றவற்றை செய்ததும், இன்ஸ்டாகிராமில் ரூ.10-க்கு ஒருவா விடுத்த சவாலை ஏற்று பார்த்திபன் நடுரோட்டில் குளித்ததும் தெரியவந்தது. இதைத்தொடாந்து பார்த்திபன் மீது பொதுமக்களுக்கு இடையூறு செய்தல், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுதல் உள்பட மொத்தம் 3 பிரிவுகளின் கீழ் ஈரோடு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவருக்கு ரூ.3 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.

ரூ.10-க்கு ஆசைப்பட்டு ஒருவர் விடுத்த சவாலை ஏற்று அபராதத்தின் மூலம் வாலிபர் ஒருவர் ரூ.3 ஆயிரத்து 500-ஐ இழந்த சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்ப ஏற்படுத்தியது.

இதுபோன்ற சட்ட விதிமுறைகளை மீறி இளைஞர்கள் செயல்பட வேண்டாம் என்றும், அதையும் மீறி செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com