எஸ்.வி சேகர் வருத்தத்தை ஏற்றுக்கொள்கிறோம்: உயர் நீதிமன்றத்தில் காவல்துறை பதில்

தேசிய கொடியை அவமதித்தது தொடர்பான முன் ஜாமின் வழக்கில் வருத்தம் தெரிவித்து எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொள்கிறோம் என சென்னை உயர் நீதிமன்றத்தில், காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
எஸ்.வி சேகர் வருத்தத்தை ஏற்றுக்கொள்கிறோம்: உயர் நீதிமன்றத்தில் காவல்துறை பதில்
Published on

சென்னை,

எம்.ஜி.ஆர். சிலைக்கு காவிப் போர்வை போர்த்தியது, பெரியார் சிலை மீது காவிச் சாயம் ஊற்றப்பட்ட சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலைவர்களின் சிலைகளை இவ்வாறு களங்கம் செய்வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக இணையதள பதிவு ஒன்றில், நடிகர் எஸ்.வி.சேகர், தேசியக் கொடி குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் தேசியக் கொடியை அவமதித்து, தமிழக முதல்வரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசிய எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என காவல்துறையில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி, தேசியச் சின்னங்கள் அவமதிப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் எஸ்.வி.சேகர் மீது மத்தியக் குற்றப் பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையின் போது நடிகர் எஸ்.வி.சேகர் தனது செயலுக்கு மன்னிப்புக் கோரி மனு தாக்கல் செய்தால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து எஸ்.வி.சேகர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வருத்தம் தெரிவித்து எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொள்வதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை வரும் செப்டம்பர் 14 - ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி அதுவரை எஸ்.வி.சேகரை கைது செய்யக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com