லாரி மீது பைக் மோதி விபத்து: கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலியான சோகம்

கல்லூரி மாணவர்கள் 2 பேர் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பூந்தமல்லி,
பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் பகுதியைச் சேர்ந்த நிர்மல் (19), சந்தோஷ் குமார் (18) ஆகிய இருவரும் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் பயின்று வந்தனர். நண்பர்களான இவர்கள் இன்று அதிகாலை சென்னீர்குப்பத்திலிருந்து பாரிவாக்கம் சிக்னல் பகுதியில் உள்ள டீக்கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
அப்போது எதிர்பாராத விதமாக, கோழிகளை ஏற்றிச் சென்ற முன்னால் சென்ற லாரியின் மீது அவர்களது மோட்டார் சைக்கிள் உரசியது. இதில் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அச்சமயம் லாரியின் சக்கரம் அவர்கள் மீது ஏறி இறங்கியது. இந்த கோர விபத்தில் இருவரும் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இருவரின் உடல்களையும் மீட்டு சென்னை போரூர் தனியார் மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், லாரி டிரைவரான ராணிப்பேட்டையைச் சேர்ந்த நசீர் (39) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர்கள் இருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






