

அனுப்பர்பாளையம்,
திருப்பூரில் நண்பர்களுடன் மோட்டார்சைக்கிளில் சென்றபோது கன்டெய்னர் லாரி மோதி வாலிபர் பரிதாபமாக பலியானார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வாலிபர் பலி
திருப்பூர் 15 வேலம்பாளையத்தை அடுத்த புதுக்காலனி பகுதியை சேர்ந்தவர் அஜித் (வயது 28). தையல் தொழிலாளி. இவர் நேற்று காலை அனுப்பர்பாளையம்புதூரில் இருந்து திருமுருகன்பூண்டிக்கு நண்பர்களான விக்னேஷ் (25), கவுரிசங்கர் ஆகியோருடன் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மோட்டார்சைக்கிளை விக்னேஷ் ஓட்டினார். மற்ற 2 பேரும் பின்னால் அமர்ந்து சென்றனர். திலகர்நகர் அருகே சென்றபோது திருப்பூர்-அவினாசி சாலையில் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரியை இடதுபுறமாக முந்திச்செல்ல முயன்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் லாரி மீது லேசாக உரசியதில் நிலைதடுமாறி 3 பேரும் கீழே விழுந்தனர்.
இதையடுத்து அஜித் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். விக்னேஷ், கவுரிசங்கர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த 15 வேலம்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அஜித் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
இதற்கிடையே விபத்து நடந்த இடத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர். இதனால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தி, நெரிசலை சரி செய்தனர். இந்த விபத்து காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-----------------