சென்னையில் விபத்தில்லா புத்தாண்டு கொண்டாட்டம்


சென்னையில் விபத்தில்லா புத்தாண்டு கொண்டாட்டம்
x
தினத்தந்தி 1 Jan 2026 11:21 AM IST (Updated: 1 Jan 2026 1:09 PM IST)
t-max-icont-min-icon

ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துகளை இன்முகத்துடன் பகிர்ந்துக் கொண்டனர்.

சென்னை,

2025-ம் ஆண்டு விடைபெற்றது. 2026-ம் ஆண்டு இனிதே பிறந்துள்ளது. தமிழ்நாட்டில் மக்கள் உற்சாகத்துடன் புத்தாண்டை வரவேற்றனர். பெரும்பாலான தெருக்களில் இளைஞர்கள் நட்சத்திர வடிவில் 2026-ம் ஆண்டு வாசகம் பொறிக்கப்பட்ட பதாகையை கட்டி தொடங்க விட்டிருந்தனர். புத்தாண்டு பிறந்தவுடன் ‘கேக்' வெட்டி ஒருவருக்கு ஒருவர் வழங்கி மகிழ்ச்சியுடன் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.

சென்னையில், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான ‘ஹாட் ஸ்பாட்'டான மெரினா கடற்கரையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31-ந்தேதி இரவு மக்கள் உற்சாகம் கரை புரண்டு ஓடும். இரவு 8 மணிக்கே மக்கள் கூட்டம் அலைமோதும். ஆனால் நேற்று இரவு 10 மணிக்கு மேலாகியும் மக்கள் கூட்டம் மிகவும் குறைவாக இருந்தது. இரவு 12 மணியை நெருங்கியபோது மக்கள் கூட்டம் ஓரளவு காணப்பட்டது.

போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் எதிரே உள்ள மணிக்கூண்டின் கடிகார முள் 12 மணியை தொட்டவுடன், ‘ஹாப்பி நியூ இயர்' என்று வாழ்த்து கோஷங்களை எழுப்பியும், ‘கேக்' வெட்டியும் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் புத்தாண்டை வரவேற்றனர். மெரினா கடற்கரையில் வழக்கமான ஆட்டம்-பாட்டம்- கொண்டாட்டம் குறைந்திருந்த நிலையில் பெசன்ட் நகர் கடற்கரையில் மக்கள் உற்சாகம் கரை புரண்டு ஓடியது.

புத்தாண்டையொட்டி சாந்தோம், பெசன்ட் நகர், மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், எழும்பூர் உள்ளிட்ட தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பிரார்த்தனை முடிந்தவுடன் ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துகளை இன்முகத்துடன் பகிர்ந்துக் கொண்டனர்.

புத்தாண்டு கொண்டாட்டங்களில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாத வகையில் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சென்னையில் போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் 19 ஆயிரம் போலீசார் புத்தாண்டு பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

மெரினா, பெசன்ட் நகர் கடற்கரையில் போலீசார் அதிகளவில் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். ‘டிரோன்' கேமராக்கள் மூலமாகவும் மக்கள் கூட்டத்தை கண்காணித்தனர். புத்தாண்டு தினமான இன்று கடற்கரைகள், சுற்றுலாத்தலங்களில் மக்கள் அதிகளவில் கூடுவார்கள் என்பதால் இன்றும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், சென்னையில் நேற்று இரவு நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது விபத்தால் உயிரிழப்புகள் இல்லை எனவும் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. மாநகர் முழுவதும் 19,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதுடன் 425 இடங்களில் தடுப்புகள் அமைத்து சிறப்பு கண்காணிப்பு செய்யப்பட்டுள்ளதால் குற்ற சம்பவங்கள் நடைபெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story