

தூத்துக்குடி,
கோவையிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நாகர்கோவில் நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி பேருந்து இன்று அதிகாலை கோவில்பட்டி மூப்பன்பட்டி விலக்கு பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.
அதே நேரத்தில், நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த இசக்கி ஓட்டி வந்த சிமெண்ட் கலவை டேங்கர் லாரியின் பிரேக் பகுதியில் திடீரென பழுது ஏற்பட்டதால், லாரியை சாலையோரமாக நிறுத்திவிட்டு பழுதை சரிசெய்ய முயன்றார். லாரி நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் எச்சரிக்கை குறியீடுகள் எதுவும் வைக்கப்படாத நிலையில், பின்னால் வந்த ஆம்னி பேருந்து எதிர்பாராதவிதமாக டேங்கர் லாரியின் பின்புறத்தில் பலமாக மோதியது.
விபத்தின் தாக்கத்தால் பேருந்தின் முன்பகுதி முழுவதுமாக சேதமடைந்தது. பேருந்து ஓட்டுநரான உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சரவணன் வாகன இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டார். மேலும், பேருந்தில் பயணம் செய்த 8 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட 20 பேர் காயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த கோவில்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர், நவீன கருவிகள் மூலம் பேருந்தை வெட்டி ஓட்டுநர் சரவணனை மீட்டனர். காயமடைந்த அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தால் திருநெல்வேலி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர்.
மேலும், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், டேங்கர் லாரி ஓட்டுநர் இசக்கியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.