சென்னையில் பைக் மோதி விபத்து: கல்லூரி மாணவர் பரிதாப பலி!

விபத்து தொடர்பாக தனியார் நிறுவன மேலாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து
Published on

சென்னை,

சென்னை நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசனின் மகன் புஷ்பராஜ் (19), அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் ஓட்டல் மேனேஜ்மென்ட் படித்து வந்தார். நேற்று இரவு அவர் தனது நண்பர்களான ஸ்ரீராம் மற்றும் பிரதீஷ் ஆகியோருடன் தந்தையின் ஜூபிடர் பைக்கில் வெளியே சென்றிருந்தார்.

பைக் மோதி விபத்து

கோயம்பேடு ரோகிணி திரையரங்கம் பகுதியில் இருந்து அமைந்தகரை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது, அவர்கள் சென்ற வாகனத்தின் பின்னால் அதிவேகமாக வந்த யமஹா பைக் எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்த புஷ்பராஜுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவருடன் வந்த மற்ற இருவரும் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். மூவரும் தலைக்கவசம் அணியாமல் சென்றதாக கூறப்படுகிறது.

காயமடைந்த புஷ்பராஜை அப்பகுதியினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை 2.30 மணி அளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

இந்த விபத்து குறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், விபத்தை ஏற்படுத்தியவர் முத்துமணிகண்டன் (27) என்பது தெரியவந்தது. இவர் டிவிஎஸ் வீல்ஸ் இந்தியா நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருவதுடன், பகுதி நேரமாக ரேப்பிடோ ஓட்டுநராகவும் செயல்பட்டு வந்துள்ளார்.

அதிவேகமாக வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் முத்துமணிகண்டனை பிடித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த மாணவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com