ஒரகடம் அருகே அரசுப் பேருந்து மீது டாரஸ் லாரி மோதி விபத்து: 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்

தொழிலாளர்கள் அவசரமாக கூறியதை அடுத்து, ஓட்டுநர் பேருந்தை நிறுத்த திடீரென பிரேக் பிடித்துள்ளார்.
விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து- லாரி
விபத்துக்குள்ளான அரசுப் பேருந்து- லாரி
Published on: 

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே உள்ள தேவரியம்பாக்கம் பகுதியில் இன்று நேரிட்ட சாலை விபத்தில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.

தவறிப்போன பேருந்து நிறுத்தம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் ஆருகே தேவரியம்பாக்கம் பகுதியில், இன்று (புதன்கிழமை) அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த அரசுப் பேருந்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் 2 பேர் பயணம் செய்துள்ளனர். அவர்கள் வாரணவாசி பேருந்து நிலையத்தில் இறங்க வேண்டிய நிலையில், தங்களது நிறுத்தம் வந்ததை கவனிக்காமல் விட்டனர். பேருந்து வாரணவாசி நிறுத்தத்தைத் தாண்டி சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் சென்ற பிறகு, தாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டதை உணர்ந்த தொழிலாளர்கள், பேருந்தை உடனடியாக நிறுத்துமாறு ஓட்டுநரிடம் கூறியுள்ளனர்.

திடீர் பிரேக் – லாரி மோதி விபத்து

தொழிலாளர்கள் அவசரமாக கூறியதை அடுத்து, ஓட்டுநர் பேருந்தை நிறுத்த திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதனால், எதிர்பாராத விதமாக பேருந்து நடுவழியில் சட்டென்று நின்றது. அப்போது அந்த அரசுப் பேருந்தின் பின்னால் தொடர்ந்து வந்துகொண்டிருந்த கனரக டாரஸ் லாரி, பேருந்து திடீரென நின்றதால் கட்டுப்பாட்டை இழந்து, பேருந்தின் பின்புறத்தில் பலமாக மோதியது.

மீட்புப் பணிகள்- விசாரணை

இந்த கோர விபத்தில் பேருந்தின் பின்புறம் பலத்த சேதமடைந்ததுடன், உள்ளே இருந்த பயணிகள் நிலைதடுமாறி விழுந்தனர். இதில் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஒரகடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com