நெல்லை அருகே கார் மீது அரசு பேருந்து மோதி விபத்து: தனியார் வங்கி மேலாளர் பலி

விபத்து குறித்து திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லை அருகே கார் மீது அரசு பேருந்து மோதி விபத்து: தனியார் வங்கி மேலாளர் பலி
ஜெரால்டு
Published on: 

நெல்லை,

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில், தனியார் வங்கி மேலாளர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தனியார் வங்கி மேலாளர்

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியை அடுத்த பண்டாரஞ்செட்டிவிளை பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் என்பவரின் மகன் ஜெரால்டு (வயது 38). இவர் திசையன்விளையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் ஜெரால்டு தனது காரில் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு வள்ளியூர் பகுதியிலிருந்து திசையன்விளை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

அவரது கார் திசையன்விளை அருகே உள்ள மிட்டாதார்குளம் நம்பியாற்றுப் பாலம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக கார் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் கார் முற்றிலும் நொறுங்கியது. காரை ஓட்டிச் சென்ற வங்கி மேலாளர் ஜெரால்டு, இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

விபத்து குறித்து தகவல் அறிந்த திசையன்விளை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ஜெரால்டின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com