மனைவியுடன் சென்றபோது உயிரைப் பறித்த விபத்து; டிராக்டர் டிரைவர் தலைமறைவு

முன்னாள் சென்ற டிராக்டரை ஞானவேல் முந்த முயன்றார். அப்போது டிராக்டர் திடீரென வலதுபுறம் திரும்பவே மோட்டார் சைக்கிள் அதன் மீது மோதியது.
பலி
Published on: 

கண்ணமங்கலம்,

காஞ்சீபுரத்தை அடுத்த அய்யம்பேட்டையை சேர்ந்தவர் ஞானவேல் (வயது 39). இவரது மனைவி செங்கம் அருகே உள்ள காஞ்சியை சேர்ந்தவர்.

விபத்து

ஞானவேல் தனது மனைவி பிரியதர்சினியுடன் காஞ்சியில் உள்ள அவரது வீட்டுக்கு வந்து விட்டு காஞ்சீபுரம் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சந்தவாசலை கடந்து வந்து கொண்டு இருந்தார். கண்ணமங்கலத்துக்கு முன்பாக வண்ணாங்குளம் பகுதியில் வந்தபோது முன்னாள் சென்ற டிராக்டரை ஞானவேல் முந்த முயன்றார். அப்போது டிராக்டர் திடீரென வலதுபுறம் திரும்பவே மோட்டார் சைக்கிள் அதன் மீது மோதியது.

இதில் மோட்டார்சைக்கிளை ஓட்டிச்சென்ற ஞானவேல் சம்பவ இடத்திலேயே பலியானார். உடன் சென்ற பிரியதர்சினி காயமின்றி உயிர் தப்பினார். தகவல் அறிந்த கண்ணமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஞானவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே விபத்து நடந்ததும் டிராக்டரை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து டிராக்டரை பறிமுதல் செய்து தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com