

ராமநாதபுரம் மாவட்டம் அருகே உள்ள கொசுவன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சக்தி என்ற ஸ்ரீதர் (வயது 21). கார் டிரைவராக இருந்தார். இந்த நிலையில், ஸ்ரீதரின் உறவினரான ஹேமலதாவின் மகன் ஹரிசை வெளிநாட்டிற்கு வழியனுப்பி வைப்பதற்காக ஸ்ரீதர் மற்றும் அவரது தாயார் சுஜாதா (51), சகோதரர் வெற்றிவேல் (25), அவர்களது உறவினர்களான ஹேமலதா (53), மண்டபம் கேம்ப் பகுதியைச் சேர்ந்த ராணி (73) மற்றும் மதுரை ஜெயிலர் குடியிருப்பைச் சேர்ந்த ஸ்ரீதராணி (21) ஆகியோர், வெளிநாடு செல்லும் ஹரிசுடன் கொசுவன்குடி கிராமத்தில் இருந்து காரில் புறப்பட்டனர். காரை சக்தி என்ற ஸ்ரீதர் ஓட்டினார். இவர்கள் நேற்று மாலை சென்னை சென்றனர். அங்கு உறவினரான ஹரிசை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
அதன்பின்னர் சக்தி என்ற ஸ்ரீதர் மற்றும் அவரது உறவினர்கள் அனைவரும் சென்னையில் இருந்து காரில் மீண்டும் ராமநாதபுரத்திற்கு புறப்பட்டனர். இரவு நேரம் என்பதால் ஸ்ரீதரைத் தவிர அனைவரும் காரில் தூங்கிக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 2.30 மணிக்கு கார் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சி பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது காரை ஓட்டிய ஸ்ரீதர் தூக்கக் கலக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
செங்குறிச்சி அருகே உள்ள சுங்கச்சாவடியின் அருகே சென்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து திடீரென அங்குள்ள பெயர்ப் பலகையின் சிமெண்ட் கட்டையில் பயங்கரமாக மோதியது. கார் மோதிய வேகத்தில் அதன் முன்பகுதி அப்பளம் போல் சுக்குநூறாக நொறுங்கியது. காரில் இருந்த அனைவரும் பலத்த காயம் அடைந்தனர்.இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த ஸ்ரீதர் மற்றும் அவரது தாயார் சுஜாதா, சகோதரர் வெற்றிவேல் ஆகிய 3 பேர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ராணி, ஹேமலதா, ஸ்ரீதராணி உள்ளிட்ட 3 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
மதுரை மாவட்டம் பழங்காநத்தத்தைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 63). இவரது மகன் பிரவீன் (30). செல்வம் தனது மகனுக்கு திருமணத்திற்காக சென்னையில் பெண் பார்த்திருந்தார். இதையடுத்து அந்த பெண்ணைப் பார்ப்பதற்காக செல்வம் தனது மகன் பிரவீன், மனைவி செல்வி (55) மற்றும் உறவினர் கவிதா (52) ஆகியோருடன் காரில் மதுரையில் இருந்து புறப்பட்டார்.காரை மதுரை பழங்காநத்தத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டி (55) என்பவர் ஓட்டினார். இவர்களது கார் இன்று காலை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பிடாகம் அருகே சென்று கொண்டிருந்தது.அப்போது, அங்கு முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்தை செல்லப்பாண்டி முந்த முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.இந்த விபத்தில் காரில் பயணித்த டிரைவர் செல்லப்பாண்டி, செல்வம், கவிதா ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் காரில் இருந்த பிரவீன், செல்வி ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் விபத்தில் சிக்கி காயம் அடைந்த பிரவீன், செல்வி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்தவர் சுகவனேஸ்வரன் (வயது 25). இவர் அரூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பிரிவு மேலாளராக பணியாற்றி வந்தார்.நேற்று சொந்த ஊருக்கு திரும்பிய சுகவனேஸ்வரன், தனது நண்பரும், கோவை மென்பொருள் நிறுவன ஊழியருமான முத்தமிழ் (25) என்பவருடன் நள்ளிரவு 1 மணியளவில் ராசிபுரம் அருகே உள்ள ஆண்டலூர் கேட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். மோட்டார் சைக்கிளை முத்தமிழ் ஓட்டியதாக தெரிகிறது.அவர்கள் சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை ராசிபுரம் அடுத்த முத்துக்காளிப்பட்டி அருகே சென்றபோது, பெங்களூரில் இருந்து கேரளாவிற்கு பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் ஆம்னி சொகுசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சுகவனேஸ்வரன், முத்தமிழ் ஆகிய 2 பேரும் சுமார் 500 மீட்டர் தொலைவிற்கு இழுத்துச் செல்லப்பட்டு, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டம், பாப்பம்பாளையத்தைச் சேர்ந்த மோகன் (43), பெங்களூரில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினியராக பணியாற்றி வந்தார். மனைவி கார்த்திகா (35), மகள் அஸ்விகா (15), மகன் ஸ்ரீவந்த் (8) ஆகியோருடன் பெங்களூரில் வசித்து வந்தார்.இந்நிலையில், குடும்பத்துடன் திருவண்ணாமலை கோவிலுக்கு சாமி தரிசனம் செய்து விட்டு, மீண்டும் பெங்களூரு நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். நள்ளிரவு சுமார் 12 மணியளவில் மத்தூர் அருகே சோனாரஅள்ளி பகுதியில் வந்தபோது, கிருஷ்ணகிரியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி அரிசி ஏற்றிச் சென்ற லாரி, அவர்கள் பயணித்த கார் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் காரில் பயணித்த 4 பேரும் படுகாயமடைந்தனர். இதில் மகள் அஸ்விகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த மோகன், கார்த்திகா மற்றும் ஸ்ரீவந்தை அப்பகுதி மக்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மோகன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.