முதல்-அமைச்சர் அறிவித்தபடி 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு கிடையாது கல்வித்துறை திட்டவட்டம்

9, 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு கிடையாது என்று கல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
முதல்-அமைச்சர் அறிவித்தபடி 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு கிடையாது கல்வித்துறை திட்டவட்டம்
Published on

சென்னை,

கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு கடந்த கல்வியாண்டில் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் தவிர மற்ற அனைவருக்கும் தேர்வு நடத்தாமலேயே தேர்ச்சி அடைந்ததாக அரசு அறிவித்தது.

அதேபோல், இந்த ஆண்டும் நோய்த்தொற்றின் தாக்கம் நீடித்து வருவதை கருத்தில் கொண்டும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டும் கடந்த மாதம் (பிப்ரவரி) சட்டசபையில் 9, 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் முழு ஆண்டு தேர்வுகள் மற்றும் பொதுத்தேர்வுகள் ஏதுமின்றி தேர்ச்சி பெற்றதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டாலும் தொடர்ந்து பள்ளிகள் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. அதன்படி, 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடந்து வருகின்றன.

சுற்றறிக்கையால் குழப்பம்

இந்த நிலையில் நேற்று தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி இருந்தார். அதில், 9, 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் நடத்தப்படும் தேர்வு குறித்த அட்டவணை பின்னர் தெரிவிக்கப்படும் என்றும், செய்முறைத்தேர்வு ஏப்ரல் 15-ந்தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

முதல்-அமைச்சர் தேர்வு ஏதுமின்றி 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்த நிலையில், இப்படி ஒரு அறிக்கையை கல்வித்துறை அதிகாரி அனுப்பி இருக்கிறாரே? என்ற கேள்வி எழுந்தது. இதனால் மாணவர்களும், பெற்றோரும் குழப்பம் அடைந்தனர்.

தேர்வு கிடையாது

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, முதல்-அமைச்சர் அறிவித்த அறிவிப்புக்கு பிறகு, தேர்வு எப்படி நடத்த முடியும்?. சம்பந்தப்பட்ட அதிகாரி தவறுதலாக அந்த சுற்றறிக்கையை அனுப்பிவிட்டார். தேர்வு நடத்துவது தொடர்பாக கல்வித்துறை எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. 9, 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு கிடையாது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com