

சென்னை,
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் வருமான வரித்துறை சோதனை குறித்து தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து நேற்று மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது உறவினர்களுக்கு வழங்கிய 3 ஆயிரத்து 120 கோடி ரூபாய் மதிப்பிலான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த ஊழல் மீதும், அதில் தொடர்புடையவர்கள் மீதும் ஊழல் தடுப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு துறைகளில் மத்திய நிதியுதவி மூலம் நடைபெறும் திட்டங்களிலும், பணிகளிலும் மிகப்பெரிய ஊழலில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மீது சி.பி.ஐ. விசாரணை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
கவர்னரிடம் மனு அளிக்கும்போது, தி.மு.க. முதன்மை பொதுச்செயலாளர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி மற்றும் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மா.சுப்பிரமணியன், ஜெ.அன்பழகன் ஆகியோரும் உடன் இருந்தனர்.
கவர்னரை சந்தித்துவிட்டு வெளியே வந்த மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-
கவர்னரை சந்தித்து தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் வருமானவரி சோதனை தொடர்பான மனு ஒன்றை வழங்கி இருக்கிறோம். வருமானவரி சோதனைக்கு ஆளாகி இருக்கும் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் நாகராஜன், செய்யாத்துரையின் 3 நிறுவனங்களுக்கு மட்டும் ரூ.3 ஆயிரத்து 120 கோடி மதிப்பு உள்ள நெடுஞ்சாலைத்துறையின் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த நிறுவனங்களில் முதல்-அமைச்சரின் மகன் மற்றும் அவருடைய மாமனார் சுப்பிரமணியம் ஆகியோர் பங்குதாரர்களாக இருந்து வருகின்றனர்.
தொடர்ந்து 7 ஆண்டுகளாக நெடுஞ்சாலைத்துறையை, பொதுப்பணித்துறையை கையில் வைத்துக்கொண்டு இருக்கும் எடப்பாடி பழனிசாமி தற்போது முதல்-அமைச்சராகவும் இருந்து கொண்டு இருக்கிறார். எனவே, அந்த அதிகாரத்தை பயன்படுத்தி தனது உறவினர்களுக்கு மட்டும் பலகோடி ரூபாய் ஒப்பந்தங்களை வழங்கி உள்ளார். அதனால், அவர்கள் தற்போது வருமானவரி சோதனையில் சிக்கியிருக்கிற செய்திகள் வெளிவந்து கொண்டு இருக்கிறது. எனவே, இது குறித்து உடனடியாக ஊழல் தடுப்பு சட்டத்தின்படி விசாரணையை நடத்திட வேண்டும் என்று கவர்னரிடம் புகார் மனுவை கொடுத்து இருக்கிறோம்.
இதுதவிர, மத்திய அரசு பல்வேறு திட்டங்களுக்காக பல கோடி ரூபாயை தமிழக அரசுக்கு ஒதுக்கி கொண்டிருக்கிறது. அப்படி ஒதுக்கக்கூடிய திட்டங்களில் முதல்-அமைச்சர் மட்டுமல்ல, பல அமைச்சர்கள் மெகா ஊழலில் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கைகளை கவர்னர் எடுக்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்தி உள்ளோம்.
அவர் எங்களிடம் கூறும்போது, இதனை சம்பந்தப்பட்ட துறைக்கும், அதன் அதிகாரிகளுக்கும் அனுப்புவதோடு, மத்திய உள்துறைக்கும் அனுப்பி வைப்பதாக உறுதி அளித்து உள்ளார். இப்பிரச்சினையில் கவர்னர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. ஒருவேளை இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நாங்கள் கோர்ட்டை நாடுவோம் என்பதையும் கவர்னரிடம் தெரிவித்துவிட்டு வந்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
அதைத்தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- இதே ஒப்பந்ததாரர்களுக்கு தி.மு.க.வும் ஒப்பந்தங்கள் வழங்கி இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளாரே?
பதில்:- தி.மு.க. கொடுத்து இருக்கிறதா? கொடுக்கவில்லையா? என்ற பிரச்சினைகளுக்குள் போகவில்லை. அப்போது இது போன்று வருமானவரி சோதனைகள் நடக்கவில்லை. அப்போது உறவினர்களுக்கும், சம்பந்திகளுக்கும், மாமனார்களுக்கும் ஒப்பந்தங்கள் கொடுக்கவில்லை. இன்று முதல்-அமைச்சரின் சம்பந்திக்கு, முதல்-அமைச்சரின் மகனின் மாமனாருக்கு, முதல்-அமைச்சரின் உறவினர்களின் பங்குதாரர்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதனால், தொடர்ந்து வருமானவரி சோதனை நடந்து கொண்டு இருக்கிறது.
இந்த சோதனைகளில் ஏறக்குறைய 189 கோடி ரூபாய் பணமாகவும், 100 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அரசு நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்திலேயே 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் ஜெயக்குமார் என்ன பதில் சொல்லப்போகிறார்?
கேள்வி:- சேகர்ரெட்டி வீட்டில் நடைபெற்ற வருமானவரி சோதனைகள் குறித்து எந்த முடிவுகளும் வெளிவரவில்லை. இது குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில்:- இது குறித்து நான் ஏற்கனவே அறிக்கைகளில் தெரிவித்து உள்ளேன். ராமமோகன் ராவ் அலுவலகம், சென்னை கோட்டையில் இருக்கும் தலைமைச் செயலாளர் அலுவலகங்களில் வருமானவரி சோதனை நடந்துள்ளது. சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடந்துள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் அளவுக்கு முதல்-அமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை பணப்பட்டுவாடாவில் ஈடுபட்ட விவகாரங்கள் என எதிலுமே, சரியான முறையில் விசாரணை நடக்கவில்லை. இதில் இருந்து வருமானவரி சோதனை என்பது மத்திய அரசின் அச்சுறுத்தலுக்காகவும், மிரட்டலுக்காகவும் தான் நடக்கிறதோ என்ற சந்தேகம் இருக்கிறது. எனவே நாங்கள் இந்த விஷயத்தை பொறுத்தவரை கோர்ட்டுக்கு போவது என்று முடிவு செய்து இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.