வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு: புதுக்கோட்டை நகர ஊரமைப்பு அதிகாரி வீட்டில் 1¼ கிலோ தங்க நகைகள், 8 கிலோ வெள்ளி, ரூ.8 லட்சம் பறிமுதல்

புதுக்கோட்டை நகர ஊரமைப்பு அதிகாரி வீட்டில் நடைபெற்ற சோதனையில் 1¼ கிலோ தங்க நகைகள், 8 கிலோ வெள்ளி, ரூ.8 லட்சம் மற்றும் பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு: புதுக்கோட்டை நகர ஊரமைப்பு அதிகாரி வீட்டில் 1¼ கிலோ தங்க நகைகள், 8 கிலோ வெள்ளி, ரூ.8 லட்சம் பறிமுதல்
Published on

சொத்து குவிப்பு

புதுக்கோட்டை மாவட்ட நகர ஊரமைப்புத்துறை இணை இயக்குனராக பணிபுரிந்து வருபவர் தன்ராசு (வயது 59). பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கூத்தூர் கிராமத்தை சேர்ந்த இவர் தஞ்சாவூர் மற்றும் சிவகங்கை மாவட்ட இணை இயக்குனராக கூடுதல் பொறுப்பும் வகித்து வந்துள்ளார். அடுத்த மாதத்தில் ஓய்வுபெற உள்ள நிலையில் தன்ராசு வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளை சேர்த்ததாக புகார்கள் எழுந்ததால், அவர் மீது பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், இவருக்கு சொந்தமான அரியலூரில் மேல அக்ரஹாரத்தில் உள்ள வீடு, ஜெயங்கொண்டம் சாலையில் உள்ள அவரது மகன் டாக்டர் கார்த்திகேயனுக்கு சொந்தமான ஸ்கேன் மையம், அரியலூர் புறவழிச்சாலையில் உள்ள திருமண மகால் ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

1 கிலோ தங்க நகைகள் பறிமுதல்

மேலும் ஆலத்தூர் தாலுகா தொண்டப்பாடி மற்றும் கூத்தூர் கிராமத்தில் தன்ராசுவின் மனைவி பெயரில் உள்ள வீடுகள் உள்பட 6 இடங்களில் ஊழல்தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு சந்திரசேகர் தலைமையில் 36 போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த சோதனை நடந்தது.

இதில் கணக்கில் காட்டப்படாத ரூ.8 லட்சம், 1 கிலோ தங்க நகைகள், 8 கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் இந்த வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com