

சென்னை,
சென்னையில் திருமங்கலம் வெல்கம் காலனியில் வசித்து வரும் விபசார தடுப்பு பிரிவு பெண் இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமியின் வீட்டில், கடந்த வெள்ளிக்கிழமையன்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதனிடையே இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி தரப்பில், தன் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக பொய் வழக்கு போட்டு சோதனை நடத்தப்படுவதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி மீது பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவரைப் பற்றி ரகசிய விசாரணை நடத்தியுள்ளனர். அதில், ராஜலட்சுமி தனது பெயரிலும், தனது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கி குவித்துள்ளார் என்பது தெரியவந்தது.
கடந்த 2017-ம் ஆண்டில் ராஜலட்சுமியின் சொத்து மதிப்பு 3 லட்சத்து 64 ஆயிரத்து 310 ரூபாயாக இருந்த நிலையில், 2025-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் அவரது சொத்து மதிப்பு 4 கோடியே 62 லட்சத்து 6 ஆயிரத்து 529 ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும், சேமிப்பாக அவர் சுமார் 80 லட்சம் ரூபாய் வைத்திருந்ததையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
மொத்தமாக இந்த காலகட்டத்தில் ராஜலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்து மதிப்பை ஆய்வு செய்தபோது 5 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகள் குவிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறையினரின் கணக்கீட்டின்படி, ராஜலட்சுமி தனது அதிகாரப்பூர்வ வருமானத்தை விட சுமார் 372 சதவீதம் அதிகமாக சொத்துகளை குவித்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த 1999-ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்த ராஜலட்சுமி, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து பிரிவில் பணியாற்றியுள்ளார். தனது பணிக்காலத்தில் ராஜலட்சுமி எந்தெந்த வழக்குகளில் எவ்வளவு லஞ்சம் வாங்கினார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜலட்சுமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.