

சென்னை,
சென்னை எழும்பூர் போலீசார், வில்சன் சுந்தரராஜ் என்பவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த அப்போதைய துணை போலீஸ் சூப்பிரண்டு ராதிகா, குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த மாவட்ட செசன்சு கோர்ட்டு, வில்சன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என கூறி அவரை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டும் உறுதி செய்தது.
இந்நிலையில் புகார்தாரர் ராஜாமணியுடன் சேர்ந்து விசாரணை போலீஸ் அதிகாரி ராதிகா தனக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்ததாக கூறி சென்னையில் உள்ள சிவில் கோர்ட்டில் வில்சன் சுந்தரராஜ் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக போலீஸ் அதிகாரி ராதிகாவுக்கு கோர்ட்டு சம்மன் அனுப்பியது.
இந்த சம்மனை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் ராதிகா மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத நிலையில் அவர் விடுதலை ஆகும்போது, தனக்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்ததாக போலீஸ் மீது குற்றம்சாட்ட முடியாது. வழக்கில் விடுதலை ஆகும் நபர்கள், அந்த வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரிகள் மீது இதுபோல வழக்கு தொடர அனுமதித்தால், அது புலன் விசாரணை அமைப்பின் சுதந்திரத்தில் தலையிடுவது போல் ஆகிவிடும். எனவே, மனுதாரர் ராதிகாவுக்கு எதிரான சம்மனை ரத்து செய்கிறேன் என்று உத்தரவிட்டார்.