தமிழகம் முழுவதும் முதியோர் இல்லங்களை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் கலெக்டர்களுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள முதியோர் இல்லங்களை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் முதியோர் இல்லங்களை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் கலெக்டர்களுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

கோவையைச் சேர்ந்த சிவராமன் (வயது 71) என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லாமல், பெரும் தொகையை வசூலித்துக்கொண்டு முதியோர்களை ஏமாற்றுகின்றனர். இதேபோல பல முதியோர் இல்லங்கள் பணம் பறிக்கும் மையங்களாக செயல்படு கின்றன.

எனவே முதியோர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் விதிமுறைகளை பின்பற்றி முதியோர் இல்லங்கள் செயல்படவும், அவ்வாறு செயல் படாத முதியோர் இல்லங்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, சமூக நலத்துறை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சி.வி.கார்த்திக்கேயன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் சமூக நலத்துறை முதன்மை செயலாளர் மணிவாசகம் தனது அதிகாரிகளுடன் நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையை படித்து பார்த்து திருப்தியடையாத நீதிபதிகள், வயதான காலத்தை நிம்மதியாக கழிக்க வேண்டிய முதியோர், இதுபோன்ற முதியோர் இல்லங்களை நாடுகின்றனர். ஆனால், இந்த இல்லங்கள் பணம் பறிக்கும் மையங்களாக செயல்படுகின்றன. எனவே தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களில் செயல்படும் அரசு மற்றும் தனியார் முதியோர் இல்லங்களை, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். கோவை மாவட்டத்தை பொறுத்தவரை சமூக நலத்துறை செயலாளர் நேரடியாக சென்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com