தமிழகம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் குடிநீர் வழங்க நடவடிக்கை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் சி.என்.மகேஸ்வரன் பேட்டி

தமிழகம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நிலத்தடி நீர் மட்டம் அதலபாதாளத்துக்கு போய்விட்டது என்று குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் சி.என்.மகேஸ்வரன் கூறினார்.
தமிழகம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் குடிநீர் வழங்க நடவடிக்கை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் சி.என்.மகேஸ்வரன் பேட்டி
Published on

சென்னை,

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் பணியாற்றும் வாரிய செயற்பொறியாளர்கள் பேரூராட்சிகள் உதவி-இயக்குனர், கிராம ஊராட்சிகள் உதவி இயக்குனர்களுடன் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர், சி.என்.மகேஸ்வரன் நேற்று காணொலி காட்சி மூலம் கருத்துக்களை கேட்டார்.

இதில் தினசரி வரையறுக்கப்பட்ட அளவு குடிநீர் ஊரகக் குடியிருப்புகளுக்கும், நகரங்களுக்கும் வழங்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் ஆதாரம் பொய்த்துப்போன பகுதிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்ய வாரிய பொறியாளர்கள் உதவி செய்ய வேண்டும். குழாய் கசிவுகள், வெடிப்புகள், மின்மோட்டாரில் ஏற்படும் பழுதுகள் சரிசெய்யும் பணிகளை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து தொய்வின்றி குடிதண்ணீர் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

பின்னர் தினத்தந்தி நிருபர் கேட்ட கேள்விகளும், அதற்கு சி.என்.மகேஸ்வரன் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- குடிநீர் வினியோகம் செய்ய வாரியம் என்ன திட்டங்களை செயல்படுத்தி வருகிறது? இதன் மூலம் எவ்வளவு தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது?

பதில்:- 556 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் தினசரி 2 ஆயிரத்து 146 மில்லியன் லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. தினசரி 85 முதல் 92 சதவீதம் தண்ணீர் நிலத்தில் இருந்து எடுக்கப்படுகிறது. சராசரியாக இன்று (நேற்று) 1,816 மில்லியன் லிட்டர் இவ்வாறு எடுக்கப்பட்டுள்ளது.

கேள்வி:- தண்ணீர் தட்டுப்பாடு இருக்கும் இன்றைய சூழ்நிலையில் வாரியம் எந்த வழிகளில் தண்ணீரை பெற்று வினியோகம் செய்கிறது?

பதில்:- ஆற்றுப்படுகைகளின் மேல்பரப்பில் 52 சதவீத திட்டங்களும், 27 சதவீதம் நீர் உரிஞ்சும் கிணறுகள் மூலமும், 16 சதவீதம் நீர் சேமிக்கும் கிணறுகள் மூலமும், 5 சதவீதம் இதர வழிகள் மூலம் தண்ணீர் பெறப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது.

கேள்வி:- தமிழகம் முழுவதும் எவ்வளவு பேருக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது?

பதில்:- தமிழகத்தில் 7.21 கோடி மக்கள் உள்ளனர். இதில் 4.23 கோடி பேருக்கு குடிநீர் வடிகால் வாரியம் மூலமும் 2.98 கோடி பேருக்கு உள்ளாட்சி அமைப்புகள் மூலமும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

கேள்வி:- ஒரு தனிநபருக்கு, ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது?

பதில்:- மாநகராட்சியில் வசிப்பவர்களுக்கு 135 லிட்டர், நகராட்சியில் வசிப்பவர்களுக்கு 110 லிட்டர், பேரூராட்சிக்கு 70 முதல் 90 லிட்டர், ஊராட்சிகளுக்கு 55 லிட்டர் வீதம் குடிநீர் வினியோகம் செய்ய ஐக்கிய நாடுகள் சபை உத்தரவிட்டு உள்ளது. தற்போது போதிய மழையின்மையால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து உள்ளதால் 86 சதவீதம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கேள்வி:- நடப்பாண்டு போதிய மழை பெய்துள்ளதா?

பதில்:- கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை 960 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் 811 மில்லி மீட்டர் என்ற அளவில் மழை பெய்தது. அதேபோல் கடந்த ஜனவரியில் இருந்து நடப்பு மாதம் வரை 131 மில்லி மீட்டருக்கு பதிலாக 41 மி.மீ. என்ற அளவில் தான் மழை பெய்தது.

கேள்வி:- மழை இல்லாததால் மாநிலம் முழுவதும் நிலத்தடி நீர் மட்டம் எந்த அளவில் உள்ளது?

பதில்:- கடந்த 2 ஆண்டுகளாகவே போதிய மழை இல்லை. இதனால் கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் தரை மட்டத்தில் இருந்து 20 மீட்டருக்கு கீழே தண்ணீர் சென்றது. கடந்த ஆண்டு மே மாதம் 18.1 மீட்டரிலும், இந்த மாதம் 17.5 மீட்டர் ஆழத்திலும் நிலத்தடி நீர் மட்டம் உள்ளது.

கேள்வி:- வாரியம் செயல்படுத்தி வரும் 556 திட்டங்களில் போதிய தண்ணீர் இருக்கிறதா?

பதில்:- மேட்டூர், பவானிசாகர், அமராவதி, பெரியார், வைகை, பாபநாசம், மணிமுத்தாறு, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, கிருஷ்ணகிரி, சாத்தனூர், சோலையாறு, பரம்பிக்குளம், ஆழியாறு, திருமூர்த்தி, சிறுவாணி, பில்லூர் ஆகிய அணைகளை நம்பியே வாரியத்தின் 556 கூட்டுக்குடிநீர் திட்டங்களும் உள்ளன. இந்த திட்டங்கள் நன்றாகவே செயல்பட்டு வருகின்றன. பெருஞ்சாணி, மணிமுத்தாறு உள்ளிட்ட ஒரு சில அணைகளில் தான் தண்ணீர் குறைந்து உள்ளது. மீதம் உள்ள அணைகளில் தண்ணீர் உள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் தற்போது அணைகளின் நீர்மட்டம் நன்றாகவே உள்ளது. மாநிலம் முழுவதும் அடுத்த 2 மாதங்களுக்கு தண்ணீர் வழங்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. அதுவும் குறிப்பாக தற்போது 1,816 மில்லியன் லிட்டரும், அடுத்த மாதம் 1,800 மில்லியன் லிட்டர் வீதம் தண்ணீர் வினியோகிக்க முடியும்.

கேள்வி:- குடிநீருக்கு பயன்படுத்தப்படும், மின்மோட்டார்கள், குழாய்கள் போன்றவை மாற்றி புதியவை அமைக்கும் திட்டங்கள் உள்ளனவா?

பதில்:- மாநில பேரிடர் நிவாரண நிதி மூலம் ரூ.27 கோடி நிதியை தமிழக அரசு வழங்கி உள்ளது. இதன் மூலம் 325 திட்டங்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதில் நீண்ட காலம் பயன்பாட்டில் உள்ள கூட்டுக்குடிநீர் திட்டங்கள் புனரமைக்கப்பட்டு வருகிறது. இதுதவிர 99 கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் ரூ.244 கோடி மதிப்பில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதில் குழாய் கசிவுகள், வெடிப்புகள், 20 ஆண்டுகளுக்கு முன்பு பொருத்தப்பட்ட பழைய குழாய்கள் மாற்றியமைப்பது, புதிய மின்மோட்டார்கள் பொருத்துவது போன்ற பணிகள் நடந்து வருகிறது. 325 திட்டங்களில் 92 திட்டங்களும், 99 திட்டப்பணிகளில் 36 திட்டப்பணிகளும் நிறைவடைந்து உள்ளன. இதன் மூலம் வழக்கத்தை விட கூடுதலாக 20 மில்லியன் லிட்டர் தண்ணீர் பெறப்பட்டு வருகிறது.

கேள்வி:- மாநிலம் முழுவதும் பொதுமக்களுக்கு குடிநீர் சீராக வழங்கப்படுகிறதா என கண்காணிக்கப்படுகிறதா?

பதில்:- குடிநீர் வினியோகத்தை கண்காணிக்க 556 திட்டங்களும் 218 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. 258 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் உதவி நிர்வாகப் பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள், இளநிலைப் பொறியாளர்கள் என்ற நிலையில் சிறப்பு கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஒவ்வொரு குழுவும் செயற்பொறியாளர் தலைமையில் செயல்படுகிறது. இந்த குழு தினசரி அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறதா? குழாய்களில் பழுது இருக்கிறதா? என்பது குறித்து ஆய்வு செய்து தினசரி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்காக முன்பயண அறிக்கையும் சமர்ப்பித்து உள்ளனர்.

பொதுமக்களுக்கு வாரியத்தின் தாரக மந்திரமான குறிப்பிட்ட நேரத்தில் குடிநீர் வினியோகம், வாக்கு அளித்த அளவில் தரமான குடிநீர் வினியோகம் செய்வது உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதன்படி போர்க்கால அடிப்படையில் மாநிலம் முழுவதும் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களிடம் இருந்து கருத்து கேட்பதற்காக அவசர தகவல் மையம் ஒன்று ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 94458-02145 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களையும் தெரிவிக்கலாம். இதில் பெறப்படும் தகவல்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கேள்வி:- குடிநீர் வினியோகத்தில் நீங்கள் சந்திக்கும் சவால்கள் என்ன?

பதில்:- 80 சதவீதம் வாரியம் மூலமும் 20 சதவீதம் அப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர் மூலமும் பொதுமக்களின் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் ஒரு சில நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் நிலத்தடி நீர் குறைந்ததால் 100 சதவீதமும் வாரியமே வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. அதேபோல் சிலர் சட்டவிரோதமாக வாரிய குழாய்களில் இருந்து தண்ணீர் எடுக்கின்றனர். இதுதொடர்பாக 832 இணைப்புகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து வாரியத்துக்கு சொந்தமான குழாய்களில் தண்ணீர் எடுப்பவர்கள் மீது போலீசில் புகார் அளித்து குற்ற நடவடிக்கை எடுக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. காலநிலை மாற்றத்தால் குழாய்கள் வெப்பம் தாங்காமல் வெடித்து விடுகிறது. இதனையும் சந்திக்க வேண்டியிருக்கிறது.

தமிழகம் முழுவதும் மழை நீர் சேகரிப்பு அமைப்பு முறைகளை செயல்படுத்த தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளை வாரியம் அளித்து வருகிறது. எனவே, குடிநீரை பொதுமக்கள் அனைவரும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com