

சென்னை
சம்பள உயர்வு மற்றும் ஓய்வூதிய நிலுவைத் தொகை வழங்கக் கோரி அரசு போக்குவரத்துக் கழகத்தின் 10 தொழிற் சங்கத்தினர் கடந்த வியாழக்கிழமை முதல் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
23 தடவை பேச்சு வார்த்தை நடத்தியும் எந்த உடன்பாடும் எட்டப்படாத நிலையில், பஸ் தொழிலாளர்கள் தங்களது வேலை நிறுத்தத்தை கை விட்டுப் பணிக்கு திரும்ப வேண்டும் என்று தமிழக அரசும், ஐகோர்ட்டும் மீண்டும், மீண்டும் அறிவுறுத்தி வருகின்றன.
பஸ் தொழிலாளர்கள் அந்த கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டனர். தங்களது கோரிக்கைகள் நிறை வேறும் வரை ஸ்டிரைக்கை தொடர அவர்கள் முடிவு செய்தனர். இதனால் பஸ் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் இன்று 7-வது நாளாக நீடிக்கிறது.
முதலில் பணிக்கு வராமல் புறக்கணித்த பஸ் தொழிலாளர்கள் நேற்று தங்கள் குடும்பத்தினரையும் அழைத்து வந்து டெப்போக்கள் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். இன்று பஸ் தொழிலாளர்கள் தமிழகம் முழுவதும் தொழிலாளர் நல ஆணைய அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல ஆணைய அலுவலகத்தை முற்றுகையிட்டு போக்குவரத்து தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தின் போது தொமுச சண்முகம் கூறியதாவது:-
பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை தர முடியாது என்பது சட்டப்படி குற்றம் .போராட்டத்தில் நீதிமன்றம் தலையிட்டு முறையான தீர்ப்பு வழங்க வேண்டும்
பொங்கல் பேருந்துகளை இயக்க எங்களுக்கும் விருப்பம்தான், ஆனால் அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை தர முடியாது என்பது சட்டப்படி குற்றம். என கூறினார்.
#BusStrike | #TransportWorkers | #LPF | #TNBusStrike