

மும்பை,
மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் 13 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெயர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
வாக்காளர் பட்டியல்
மராட்டியத்தில் கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபரில் சட்டசபை தேர்தல் நடந்தது. அப்போது, மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 8 கோடியே 35 லட்சத்து 28 ஆயிரத்து 310 ஆக இருந்தது. இதைத்தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், இணைக்கும் பணி நடைபெற்றது.
அதன்படி, தற்போது 18 வயதை பூர்த்தி செய்த 13 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக வாக்காளர் பட்டியலில் இணைந்துள்ளனர். இதனால், மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 8 கோடியே 48 லட்சத்து 96 ஆயிரத்து 357 ஆக உயர்ந்தது.
இதில், 4 கோடியே 45 லட்சத்து 67 ஆயிரத்து 486 பேர் ஆண்கள். 4 கோடியே 3 லட்சத்து 27 ஆயிரத்து 16 பேர் பெண்கள். 1,855 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர்.
அகமத்நகர் மாவட்டம் முதலிடம்
அதிகபட்சமாக அகமத்நகர் மாவட்டத்தில் 58 ஆயிரத்து 754 பேரும், நாக்பூர் மாவட்டத்தில் 54 ஆயிரத்து 212 பேரும், மும்பை புறநகரில் 50 ஆயிரத்து 887 பேரும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
அதே வேளையில், 3 லட்சத்து 65 ஆயிரத்து 722 பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது. இதிலும், அதிகபட்சமாக அகமத்நகர் மாவட்டத்தில் 32 ஆயிரத்து 518 பெயர்கள் நீக்கப்பட்டன.
வருகிற நவம்பர்- டிசம்பர் மாதத்தில் மீண்டும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யப்படும் என்று மாநில தேர்தல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.