பெண் போலீஸ் என்று தெரியாமல் வடமாநில வாலிபர்கள் செய்த செயல்... மெரினாவில் பரபரப்பு

பெண் போலீசிடம் இரண்டு வாலிபர்கள் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.
சென்னை,
சென்னை போலீசில் பணியாற்றும் பெண் போலீஸ் ஒருவர் தனது தோழியுடன் நேற்று முன்தினம் மெரினா கடற்கரைக்கு சென்றார். அப்போது அவர் போலீஸ் சீருடை அணியாமல் சாதாரண ஆடை அணிந்திருந்தார். அவரை பெண் போலீஸ் என்று தெரியாமல் அங்கு வந்த 2 வாலிபர்கள் பாலியல் தொல்லை கொடுத்து, ஆபாசமாக பேசினார்கள்.
உடனே பெண் போலீஸ் அந்த வாலிபர்கள் 2 பேரையும் மடக்கி பிடிக்க முயற்சி செய்தார். அதில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். ஒருவரை மட்டும் பிடித்து அண்ணா சதுக்கம் போலீசில் அவர் ஒப்படைத்தார். பிடிபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரது பெயர் சுக்லா (வயது 33), மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், கொடுங்கையூரில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
அந்த வாலிபரை பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். அந்த வாலிபரின் மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.






