

ஆத்தூர்
ஆத்தூர் அருகே உள்ள பைத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருபவர் கலைச்செல்வி. இவர் சுயேட்சையாக வெற்றி பெற்று அ.தி.மு.க.வில் இணைந்தார். சமீபத்தில் இவர் தி.மு.க.வில் இணைந்தார். இவர் ஊராட்சி மன்ற தலைவராக பதவியேற்றது முதல் ஊராட்சி நிர்வாகத்தில் ஏராளமான தவறுகள் நடைபெறுவதாக வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு, சேலம் மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பப்பட்டது. இதுகுறித்து ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் ஊராட்சி மன்ற தலைவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அவரது விளக்கம் திருப்திகரமாக இல்லை எனக்கூறி அவரது நிதி வழங்கும் உரிமையை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் நேற்று பறித்து கடிதம் வழங்கினார். இதன்மூலம் பைத்தூர் ஊராட்சியில் பணிகள் செய்வதற்கு நிதி தர வேண்டும் என்றால் வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் மட்டுமே நிதி வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.