பள்ளிக்கு வராத தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை- கலெக்டரிடம் மாணவர்கள் மனு

பள்ளிக்கு வராத தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெல்லை கலெக்டரிடம் மாணவர்கள் மனு கொடுத்தனர்.
பள்ளிக்கு வராத தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை- கலெக்டரிடம் மாணவர்கள் மனு
Published on

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மாத்தம் 300-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. பாளையங்கோட்டை அருகே சீவலப்பேரியை அடுத்துள்ள மடத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், மாணவ-மாணவிகளுடன் வந்து கலெக்டர் கார்த்திகேயனை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:-

சீவலப்பேரி பஞ்சாயத்துக்கு உட்பட்ட மடத்துப்பட்டி கிராமத்தில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் 40 ஏழை, எளிய மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இது 2 ஆசிரியர்களை கொண்ட பள்ளியாக இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியர் பள்ளிக்கு வருவது இல்லை. இதனால் மாணவர்கள் படிக்க முடியாமல் எதிர்காலம் பாதித்து வருகிறது. எனவே மாணவர்களின் நலன் கருதி தற்போதைய தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்து, புதிய தலைமை ஆசிரியரை பணி நியமனம் செய்ய வேண்டும். இதுதொடர்பாக ஏற்கனவே கல்வித்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் அவர்ள் கூறிஉள்ளனர்.

தமிழர் விடுதலை களம் மாவட்ட செயலாளர் முத்துக்குமார் தலைமையில் அந்த கட்சியினர் கொடுத்த மனுவில், ''கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் உள்ள தொழிற்சாலைகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு, வடமாநிலத்தவருக்கே அதிகமாக வேலை வழங்கப்படுகிறது. எனவே உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறிஉள்ளனர்.

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாவட்ட செயலாளர் ஆபிரகாம் மற்றும் மானூர் பகுதி விவசாயிகள் கொடுத்த மனுவில், நெல்லை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து, நிவாரண நிதி வழங்க வேண்டும். பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறிஉள்ளார். இதேபோல் வன்னிக்கோனேந்தல் பகுதி விவசாயிகளும், தங்களது பகுதியை வறட்சி பகுதியாக அறிவிக்கக்கோரி மனு கொடுத்தனர்.

திருமால்நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்களது குடியிருப்புகளுக்கு 20 நாட்களாக குடிநீர் வரவில்லை. எனவே பொதுமக்களுக்கு உடனடியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறிஇருந்தனர். மானூர் தெற்கு ஒன்றிய ம.தி.மு.க. செயலாளர் சந்திரசேகர் கொடுத்த மனுவில், ''மானூர் ஒன்றியத்தில் 57 கிராமங்களில் அங்கன்வாடி பணியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. அங்கு உடனடியாக பணியாளர்களை நியமிக்க வேண்டும்'' என்று கூறிஉள்ளார்.

கூட்டத்தில் சமீபத்தில் தேனியில் ஏற்பட்ட விபத்தில் காயம் அடைந்த அற்புத செண்பகம் மற்றும் உறவினர்களுக்கு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.1 லட்சத்துக்கான காசோலைகளை கலெக்டர் வழங்கினார். மேலும் சிவந்திபுரம் சக்தி நகரில் சக்திவேல் முருகன் மற்றும் திடியூரில் தளவாய் ஆகிய இருவரும் பாம்பு கடித்து இறந்து விட்டதால், அவர்களுடைய குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதியையும் கலெக்டர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சிவகாம சுந்தரி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com