எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளர்களுக்கு எதிராக நடவடிக்கை - எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பால் பரபரப்பு

எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்து கருத்துகளை பதிவிட்டனர்.
எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளர்களுக்கு எதிராக நடவடிக்கை - எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பால் பரபரப்பு
Published on: 

சென்னை,

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆதரவாளர்கள் சிலரை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு இருக்கிறார்.

2 கோடி உறுப்பினர்கள்

அ.தி.மு.க. தொடர் தோல்வியால் எடப்பாடி பழனிசாமி மீது எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘அதிமுகவின் 2 கோடி உறுப்பினர்களில் எஸ்.பி.வேலுமணியும் ஒருவர். அவரை பற்றி இங்கு கேள்வி எழுப்ப வேண்டாம்’ என்றார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எஸ்.பி.வேலுமணி இந்த இயக்கத்தின் கொடிபிடிக்கும் தொண்டன் என்பதை விட வேறு எந்தப் பதவியும் எனக்கு பெரிதல்ல. என்னைத் தொண்டரில் ஒருவன் என்று சொன்ன கழகப் பொதுச்செயலாளர் அவர்களுக்கு நன்றி. இந்த இரண்டு கோடித் தொண்டர்களால் கொண்டுவரப்பட்டுதான் தாங்கள் இன்றைக்கு பொதுச்செயலாளர் பொறுப்பில் உள்ளீர்கள்’ என்று தெரிவித்திருந்தார்.

எஸ்.பி. வேலுமணி ஆதரவாளர்கள்

இந்நிலையில் தான் கட்சியின் தலைமையில் இருந்து அறிக்கை ஒன்று வெளியானது. அதில் அதிமுகவில் இனி யாரும் அறிக்கை மற்றும் செய்தியாளர் சந்திப்பு உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும். மாறாக அதிமுக தலைமையிடம் தொடர்ந்து ஒப்புதல் பெற்ற பின்னரே செய்தியாளர் சந்திப்பு மற்றும் அறிக்கை வெளியிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சூழலில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்து பல்வேறு கருத்துகளை பதிவிட்டனர்.

இந்தநிலையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆதரவாளர்கள் சிலரை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு இருக்கிறார்.

கண்ணியத்திற்கு மாசு

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கழகத்தின் கொள்கை- குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் கீழ்க்கண்ட நிர்வாகிகள் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

6 நிர்வாகிகள் நீக்கம்

கோவை புறநகர் மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் சபரிவிக்ரம், குறிச்சி பகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சுரேஷ்கு மார் தாஸ, போத்தனூர் மேட்டூர் ரோடு வேணு கோபால், போத்தனூர் சீனிவாசன் நகர் பரத்குமார், 98-வது வட்ட முன்னாள் செயலாளர் சேகர், குனியமுத்தூர் பகுதி இடையர்பாளையம் எம்.ஜி.ஆர். நகர் பிரபாகரன் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிவிப்பால் கோவை மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

X