காச்சா மூச்சா வலைகளை பயன்படுத்தினால் நடவடிக்கை

குமரி மாவட்டத்தில் காச்சா, மூச்சா வலைகளை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்தார்.
காச்சா மூச்சா வலைகளை பயன்படுத்தினால் நடவடிக்கை
Published on

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் காச்சா, மூச்சா வலைகளை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்தார்.

குறைதீர்க்கும் கூட்டம்

குமரி மாவட்ட மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தலைமை தாங்கி, மீனவர்களின் கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்த கூட்டத்தில் மீனவர்கள் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகள் கோரிக்கைகள் மற்றும் குறைகளை வலியுறுத்தி பேசினர்.அப்போது அவர்கள்கூறியதாவது:-

கடற்கரை மண்டல மேலாண்மை திட்ட வரைபடம் தொடர்பாக மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் அடுத்த மாதம் 26-ந் தேதி அன்று நடைபெற்ற பிறகு மண்டல மேலாண்மை திட்ட வரைபடம் தயார் செய்வது குறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். காச்சா மூச்சா வலை என்ற மூன்றடுக்கு செவுள் வலை பயன்படுத்துவோரை கண்காணித்து அரசு ஆணையை நடைமுறைப்படுத்திட வேண்டும். தேங்காப்பட்டணம் துறைமுகத்தின் மேற்கு அலை தடுப்புச்சுவர் நீட்டிப்பு பணியை கண்காணித்திட கண்காணிப்பு குழு விரைந்து அமைக்கப்பட வேண்டும்.

இணைப்புச் சாலை

நெடுஞ்சாலைத்துறை மூலம் 47 மீனவ கிராமங்களுக்கும் இணைப்பு சாலை அமைப்பது குறித்து விளக்க வேண்டும். அனைத்து மீனவ கிராமம் வாரியாக தூண்டில் வளைவு அமைத்து மீனவ கிராமங்களை பாதுகாத்திட வேண்டும். பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளங்களில் மீன்வளர்ப்பு செய்திட உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்கங்களுக்கு முன்னுரிமை அளித்திட வேண்டும். பெரியகாடு மீனவ கிராமத்தில் தூண்டில் வளைவை சீரமைக்க வேண்டும். அனைத்து மீனவ கிராமங்களிலும் மழையின் அளவை கணக்கீடு செய்திட மழைமானி அமைத்திட வேண்டும்.

மண்டைகாடுபுதூர்-புதூர் வரையிலான ஏ.வி.எம். கால்வாயினை தூர்வாரி பள்ளிமுக்கு சந்திப்பு வரையுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும். கன்னியாகுமரி கடலில் கழிவுநீர் கலப்பதை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கடற்கரை கிராமங்களுக்கு தரமான பஸ்களை சரியான நேரங்களில் இயக்க வேண்டும். மினி பஸ்களில் பெறப்படும் பயணக்கட்டணத்தை முறைப்படுத்திட வேண்டும். கடியப்பட்டணம் மீனவ கிராமத்திற்கு கூட்டுகுடிநீர் திட்டத்தில் அதிகப்படியான நீர் வழங்கிட வேண்டும்.

இவ்வாறு மீனவர்கள் பேசினர்.

கருத்துக்கேட்பு கூட்டம்

இதற்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் மற்றும் அதிகாரிகள் பதில் அளித்து பேசுகையில் கூறியதாவது:-

கடற்கரை மண்டல மேலாண்மை திட்ட வரைபடம் தொடர்பாக மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் அடுத்த மாதம் 26-ந் தேதி அன்று நடைபெற்ற பின்னரே மண்டல மேலாண்மை திட்ட வரைபடம் தயார் செய்யப்படும். காச்சா மூச்சா வலை என்ற மூன்றடுக்கு செவுள் வலை பயன்படுத்தி சிறிய மீன்குஞ்சுகள் பிடிப்பதை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு விதி மீறுவோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேங்காப்பட்டணம் துறைமுக மேற்கு அலைதடுப்புச்சுவர் நீட்டிப்பு பணிகளை கண்காணித்திட வருகிற 10-ந் தேதிக்குள் கண்காணிப்பு குழு அமைக்கப்படும். நெடுஞ்சாலைத்துறை மூலம் 47 மீனவ கிராமங்களுக்கும் இணைப்பு சாலை அமைப்பது தொடர்பாக திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு பணிகள் விரைந்து தொடரப்படும். இன்னும் 2 வாரத்தில் இதுதொடர்பாக மீனவ மக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்படும். எனவே இந்த கூட்டத்தில் மீனவர்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம்.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

அன்னைநகர், இரையுமன்துறை, மேலகடியப்பட்டினம் ஆகிய மீனவ கிராமங்களுக்கு தூண்டில் வளைவு அமைத்திட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசாணை பெறும் பொருட்டு நடவடிக்கையில் உள்ளது. அனைத்து மீனவ கிராமங்களிலும் மழைமானி அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஏ.வி.எம். கால்வாயினை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றிட ஆய்வு மேற்கொண்டு மேல்நடவடிக்கை தொடரப்படும். கன்னியாகுமரி கடலில் கழிவுநீர் கலப்பதை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடற்கரை கிராமங்களுக்கு தரமான பஸ்களை இயக்கிடவும், மினி பஸ்களில் பெறப்படும் பயணக்கட்டணத்தை முறைப்படுத்திடவும் நடவடிக்கை எடுக்கப்படும். கடியப்பட்டினம் மீனவ கிராமத்திற்கு கூட்டுகுடிநீர் திட்டத்தில் அதிகப்படியான நீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குனர் (மண்டலம்) காசிநாத பாண்டியன், மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் பாஸ்கரன், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் மீனவ பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com