ஊரடங்கு காலகட்டத்தில் திரைப்படத் துறையினரின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் நடவடிக்கை

ஊரடங்கு காலகட்டத்தில் திரைப்படத் துறையினரின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஊரடங்கு காலகட்டத்தில் திரைப்படத் துறையினரின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் நடவடிக்கை
Published on

சென்னை,

சென்னை தலைமைச் செயகத்தில் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனை தென்னிந்திய நடிகர் சங்கத்தை சேர்ந்த நடிகர் நாசர், பூச்சி முருகன், ராஜேஷ் ஆகியோர் நேற்று சந்தித்துப் பேசினர். அதன் பின்னர் நிருபர்களுக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அளித்த பேட்டி வருமாறு:-

முதல்-அமைச்சரின் ஆலோசனையின் பேரில், திரைப்படத் துறையைச் சேர்ந்த சங்கங்களை அழைத்து பேசியுள்ளேன். ஊரடங்கு காலத்தில் தொற்று பரவாமல் இருக்கவும், திரைப்படத் துறையைச் சார்ந்தவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்கும் வகையிலும் அவர்கள் கூறிய கருத்துகளை கடந்த 2 நாட்களாக கேட்டுள்ளேன்.

தடுப்பூசி

சின்னத்திரை படப்பிடிப்பின்போது 80 பேரும், சினிமா படப்பிடிப்பின்போது 150 பேர் கலந்துகொள்ளும் வகையில் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். திரைப்படத் துறை தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுள்ளனர்.

திரைப்படத் துறையினரின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுப்பதற்கு பல கருத்துக்களை கூறியுள்ளனர். அவர்கள் கூறிய கருத்துகள் அனைத்தும் முதல்-அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

சங்க தேர்தல்

ஊரடங்கு காலத்தில் மக்களின் பொழுது போக்காக சினிமா இருப்பதால், நோய் பரவாமல் இருக்கும் வகையில் படப்பிடிப்பில் ஈடுபடுவோம் என்று கூறியுள்ளனர். ஊரடங்கு முடிந்த பின்னர் திரையரங்குகளை திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். ஓ.டி.டி. தளத்தில் படங்களை வெளியிடுவது குறித்து முதல்-அமைச்சரிடம் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும். நடிகர் சங்க தேர்தல் குறித்து ஆலோசிக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

நாடகக் கலைஞர்கள்

பின்னர் நிருபர்களிடம் பேசிய நடிகர் நாசர், கொரோனா தொற்று காலத்தில் நடிகர்கள், நாடகக் கலைஞர்கள் வேலையின்றி முடங்கி கிடக்கின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டாக வேலையின்றி இருக்கும் அவர்களுக்கு அரசு செய்ய வேண்டிய உதவிகளை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளோம். ஊரடங்கிற்கு பின்னர் படப்பிடிப்பு குறித்து அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம் என்று குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com