தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: மத்திய மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

ராமநாதபுரம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.
தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: மத்திய மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
Published on

சென்னை,

இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் நேற்று (22-02-2026) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து இவ்வாறு கைது செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்தவும், இலங்கைக் காவலில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிப்பதற்கு உரிய தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும் வலியுறுத்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை மந்திரி டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது;

இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் மீன்பிடி இறங்கு தளத்திலிருந்து, இயந்திரப் படகில் மீன்பிடிக்கச் சென்ற இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் 22-2-2026 இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடிப் படகுகள் இலங்கை அதிகாரிகளால் தொடர்ந்து இதுபோன்று சிறைபிடிக்கப்படுவதும், மீனவர்கள் தொடர்ச்சியாக தடுப்புக் காவலில் வைக்கப்படுவதும் மிகுந்த கவலை அளிக்கிறது.

தற்போதைய நிலவரப்படி, தமிழ்நாட்டைச் சேர்ந்த 259 மீன்பிடிப் படகுகளும், தற்போதைய சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் உட்பட 116 மீனவர்களும் இலங்கை காவலில் உள்ளனர். இந்தத் தொடர்ச்சியான கைது நடவடிக்கைகள், கடலோர சமூகத்தினரிடையே வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்து ஆழ்ந்த பதட்டத்தையும், நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தியுள்ளது. நமது மீனவர்கள் இதுபோன்று கைது செய்யப்படுவதைத் தடுக்க நிலையான மற்றும் உறுதியான தூதரக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு மீனவர்கள் மீண்டும் கைது செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்திடவும், இலங்கைக் காவலில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிப்பதற்கு உரிய தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்று மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கரை கேட்டுக்கொள்கிறேன்.”

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com