தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: மத்திய மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 35 பேர் சிறைபிடிக்கப்பட்டனர்.
தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: மத்திய மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
Published on

சென்னை,

நாகை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த 35 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று சிறைபிடித்துள்ளனர்.

இந்த நிலையில், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் தெரிவித்து இருப்பதாவது;

இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 31 மீனவர்களையும், அவர்களது மூன்று இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுகளையும் சிறைபிடித்துள்ள இலங்கைக் கடற்படையினர், மற்றொரு சம்பவத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்களையும், அவர்களது நாட்டுப் படகினையும் சிறைபிடித்துள்ளனர்.

மீனவர்களின் வாழ்க்கையும், அவர்களது வாழ்வாதாரமும் கடலுடன் பிரிக்கமுடியாத வகையில் பின்னிப் பிணைந்துள்ளது. இதுபோன்று தொடர்ச்சியாக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தமிழ்நாட்டின் மீனவ சமூகத்தினரிடையே ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு கைது நடவடிக்கையின்போதும், மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களது குடும்பத்தினரிடையே ஆழ்ந்த அச்ச உணர்வையும், பாதுகாப்பற்ற நிலையையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, 114 மீனவர்கள் இலங்கை வசம் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், 247 படகுகளும் இலங்கை வசம் காவலில் உள்ளது.

எனவே, இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிப்பதற்கு மத்திய வெளியுறவுத் துறை மந்திரி டாக்டர் எஸ். ஜெய்சங்கர் உடனடியாக உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com