

சென்னை,
தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சென்னை ஐகோட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தியது. விசாரணை அறிக்கையை கடந்த ஆகஸ்டு 27-ந் தேதியன்று அரசிடம் நீதிபதி சமர்ப்பித்தார்.
உடல்நல குறைவு ஏற்பட்டபோது ஜெயலலிதாவை 22.9.2016 அன்று அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு உடனே அழைத்துச் சென்றதில், சசிகலா உள்ளிட்ட அவரது வீட்டில் இருந்தவர்களின் செயல்பாட்டில், இயற்கைக்கு முரணான செயல்பாட்டை ஆணையம் காணவில்லை.
ஆனால் அதன் பிறகு நடந்த சம்பவங்களை காணும்போது, சசிகலா, கே.எஸ்.சிவகுமார், அப்போதைய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அப்போதைய செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது தவறு காணப்படுவதால் அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஆணையம் தீர்மானித்துள்ளது.
அப்போதைய தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ், ஒய்.வி.சி.ரெட்டி, பாபு ஆபிரகாம், அப்பல்லோ ஆஸ்பத்திரி தலைவர் பிரதாப் சி.ரெட்டி ஆகியோரும் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் ஆணையம் கூறியுள்ளது.
அமைச்சரவையின் முடிவுப்படி அந்த அறிக்கை, சட்டசபை முன்பு வைக்கப்பட்டுள்ளது. ஆணையத்தின் பரிந்துரையின்படி, அதில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதற்காக சட்ட நிபுணர்களின் கருத்தை பெற்று பரிசீலிக்கப்படும். ஆணையத்தின் அறிக்கை, மக்கள் நல்வாழ்வுத்துறையின் முதன்மைச் செயலாளருக்கு அளிக்கப்பட்டு, அதில் நடவடிக்கை எடுப்பதற்கான முன்னெடுப்புகளை துறை மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.