'இசைவாணிக்கு கொலை மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' - செல்வப்பெருந்தகை


இசைவாணிக்கு கொலை மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - செல்வப்பெருந்தகை
x

பாடகி இசைவாணிக்கு கொலை மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியில் கானா பாடகி இசைவாணி "ஐ யம் சாரி ஐயப்பா" என்ற பாடலை பாடியிருந்தார். தற்போது சபரிமலை சீசன் தொடங்கியுள்ள நிலையில், அந்த பாடல் இணையத்தில் பரவி சர்ச்சையாகியுள்ளது. இந்த பாடல் இந்து மத உணர்வை புண்படுத்துவதாக பா.ஜ.க.வினர் குற்றம் சாட்டினர்.

இது தொடர்பாக இசைவாணி மீதும், நீலம் பண்பாட்டு மையம் நிறுவனர் இயக்குநர் பா.ரஞ்சித் மீதும் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பாடகி இசைவாணிக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாக தகவல் வெளியானது. இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"பாடகி இசைவாணி 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பாடலை பாடியிருக்கிறார். அதில் எந்த தெய்வத்தை பற்றியும் அவர் குறை செல்லி பாடவில்லை. நாங்கள் சபரிமலைக்கு சென்றிருக்கிறோம், இறைவனை வழிபாடு செய்கிறோம். அவர் ஏதாவது தவறாக பாடியிருந்தால் அதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். அதில் நாங்கள் தலையிட மாட்டோம்.

ஆனால் இசைவாணிக்கு கொலை மிரட்டல் விடுப்பது சரியா? ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சேர்ந்தவர்கள் வெளிநாடுகள் இருந்தும், இந்தியாவில் இருந்தும் தொடர்ந்து மிரட்டல் விடுகிறார்கள். தமிழக அரசும், காவல்துறையும் இதனை கவனித்து, பாடகி இசைவாணிக்கு கொலை மிரட்டல் விடுப்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

1 More update

Next Story