

சென்னை,
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியின் விடுதியில் தங்கி, பிளஸ்-2 படித்து வந்த மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றோரும், உறவினர்களும் புகார் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி, ஏற்கனவே இதுபோன்ற சம்பவங்கள் நடந்து, மூடி மறைக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. துரித நடவடிக்கை எடுக்க காவல்துறை தவறியதால், பெரும் கலவரம் வெடித்துள்ளது.
எனவே, மாணவி உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏற்கனவே இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்திருந்தால், அதுதொடர்பாகவும் உரிய விசாரணை மேற்கொண்டு, தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதே மக்களை அமைதிப்படுத்தும்.
பேராட்டம் என்ற பெயரில் பெரும் வன்முறை நடந்துள்ளதை ஏற்கமுடியாது. கலவரத்துக்கு பின்னர் மேற்கொண்ட கைது நடவடிக்கைகளை முன்னரே எடுத்திருந்தால் பெரும் சேதத்தை தவிர்த்திருக்கலாம். இந்த விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்தே சரியான முறையில் விசாரணை நடைபெறவில்லை. தவறான பாதையில் பயணிக்கிறது என்பதே மக்களின் கோபத்துக்கு காரணம். சமீபகாலமாகவே பள்ளிகள் தொடர்பாக வெளிவரும் செய்திகள் கவலையளிப்பதாகவே உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.