சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு நீண்ட விடுப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; முதல்-அமைச்சரிடம் அற்புதம்மாள் கோரிக்கை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள தன்னுடைய மகன் பேரறிவாளனுக்கு நீண்ட விடுப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் அவருடைய தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்து உள்ளார்.
சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு நீண்ட விடுப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; முதல்-அமைச்சரிடம் அற்புதம்மாள் கோரிக்கை
Published on

சிறைக்கைதிகள் பரோல் கோரிக்கை

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.அவர் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கு ஐகோர்ட்டு பல முறை பரோல் தந்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டும் பரோல் வழங்கியுள்ளது.

தற்போது பேரறிவாளன் விடுதலை கோரும் மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. இந்நிலையில் இந்தியா முழுவதும் கொரோனா 2-வது பரவல் அலை அதிகரித்துள்ளது. பெருந்தொற்றுப் பரவல் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதும் முடக்கத்தை ஏற்படுத்திய பெருந்தொற்றால் சிறைக்கைதிகள் பாதிக்கப்படாமல் இருக்கத் தேவைப்படின் பரோல் வழங்கவும் கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்தநிலையில் நீண்ட நாட்களாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் நீரிழிவு மற்றும் சிறுநீரக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தொற்று எளிதில் பரவும் அபாயமும், அப்படித் தொற்று ஏற்பட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் அபாயமும் உள்ளதால், கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு அவருக்கு நீண்ட விடுப்பு வழங்கிட வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து அற்புதம்மாள் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

சிறைகளில் பரவி வரும் கொரோனா கிருமி தொற்றும், மரணங்களும் மிகுந்த அச்சத்தைத் தருகிறது. ஏற்கெனவே பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதால் அறிவுக்குத்(பேரறிவாளன்) தொற்று ஏற்படும் ஆபத்து உண்டு என சிறைத்துறை டாக்டர்கள் அறிக்கை தந்துள்ளனர்.

மேலும், அறிவுக்குத் தடைப்பட்டுள்ள மருத்துவத்தைத் தொடர வேண்டியுள்ளது. இதனைக் குறிப்பிட்டு நீண்ட விடுப்பு வழங்கக் கோரி கடந்த 10-ந் தேதி மனு அனுப்பியுள்ளேன்.சுப்ரீம் கோர்ட்டு 90 நாட்கள் விடுப்பு வழங்கலாமென 7-ந் தேதி உத்தரவிட்டுள்ளது. எனவே, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கனிவுடன் பரிசீலித்து விரைந்து நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com