சென்னையில் பொது இடங்களில் குப்பைகள் கொட்டினால் நடவடிக்கை - ஒரே நாளில் ரூ.4.59 லட்சம் அபராதம்

நேற்று ஒரு நாள் மட்டும் ரூ.4.59 லட்சம் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி
Published on

சென்னை,

மத்திய வட்டாரத்திற்குட்பட்ட மண்டலங்களில் உள்ள பொது இடங்களில் அனுமதியின்றி குப்பைகள் கொட்டுதல், கட்டடம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் கொட்டுதல் உள்ளிட்ட விதிமீறல்களுக்காக நேற்று (17.06.2026) ஒரு நாள் மட்டும் ரூ.4.59 லட்சம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

ரூ.4.59 லட்சம் அபராதம்

பெருநகர சென்னை மாநகராட்சியில் மத்திய வட்டாரத்திற்குட்பட்ட திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை மற்றும் கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் உள்ள பொது இடங்களில் குப்பைகள் போடுதல், சுவரொட்டிகள் ஒட்டுதல், குப்பைத் தொட்டிகள் இல்லாத வணிகக் கடைகள், பெருமளவு திடக்கழிவு உற்பத்தி செய்பவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மீறுபவர்கள்,

பொது இடங்களில் திடக்கழிவுகளை எரித்தல், கடைகளில் முறையாக அகற்றப்படாத மீன் மற்றும் இறைச்சிக் கழிவுகள், தோட்டக் கழிவுகள், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் குப்பைகளை முறையாகப் பிரித்து வழங்காமை, கட்டடம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றுதல், சுத்தமான மற்றும் பாதுகாப்பான கட்டுமானம் ஆகியவற்றிற்கான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாமை உள்ளிட்ட விதிமீறல்களுக்காக 179 நபர்களுக்கு ரூ.4.59 லட்சம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரூ.59.92 லட்சம் அபராதம்

மத்திய வட்டாரத்திற்குட்பட்ட மண்டலங்களில் இத்தகைய விதிமீறல்களுக்காக 16.06.2026 வரையிலான கடந்த ஒரு மாத காலத்தில் ரூ.59,92,400 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே பொதுமக்கள் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார சீர்கேடு விளைவிக்கும் வகையில் பொது இடங்களில் குப்பைகள், கட்டடக் கழிவுகள் மற்றும் இதரக் கழிவுகளை கொட்டுதல் உள்ளிட்ட விதிமீறல்களுக்காக விதிக்கப்படும் அபராதத்தைத் தவிர்த்திடும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு நல்ஒத்துழைப்பு வழங்கிடவும், உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com